தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேன்டீன்கள் அமைப்பதற்கான உரிமம் பெறுவதற்கு 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் ஏற்கெனவே இந்த மருத்துவமனை வளாகத்தில் கேன்டீன் வைத்துள்ள மாரிச்சாமி என்பவர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு லஞ்சம் கொடுப்பதாக வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

இது குறித்து அந்த வீடியோவில் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் மாரிச்சாமியின் வழக்கறிஞரிடம் பேசினோம். “கேன்டீனுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக 3 இணைப்புகள் உள்ளன. அவை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் அறிவுறுத்தலின்பேரில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி துண்டிக்கப்பட்டன. துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என்றால், முதல்வருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் மாரிச்சாமி அப்படி செய்திருக்கிறார். அது தொடர்பான வீடியோதான் தற்போது பகிரப்பட்டு வருகிறது” என்றார்.

மாரிச்சாமி, முதல் தவணையாக 6.5 லட்சம் ரூபாய், இரண்டாவது தவணையாக 3.5 லட்சம் ரூபாய் வழங்குவதாகக் கூறி, முதல்வர் அலுவலகத்தில் வைத்து முதல்வரிடம் கட்டுக்கட்டாகப் பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள முதல்வரின் குடியிருப்புக்கும் சென்று மாரிச்சாமி பணம் கொடுக்கும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரத்திடம் கேட்டோம். “கேன்டீன் வைக்க எவ்வித இடையூறும், லஞ்சமும் பெறவில்லை. திட்டமிட்டே என்மீது பழிசுமத்துகிறார்கள். இது குறித்து விரிவாக விளக்கமளிக்க நாளை காலை செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளேன்” என்றார்.
இந்த நிலையில், லஞ்சப் புகாரில் சிக்கிய மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரத்தை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.