திருப்பத்தூர்: ஆம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ. வேலு உரிமை தொகை குறித்தும் யாருக்கெல்லாம் உரிமை தொகை கிடைக்காது என்பது குறித்தும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்பதாகும். இதற்கு அப்போதே பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
திமுக ஆட்சி அமைந்தது முதலே இந்தத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பதில் பலரும் ஆர்வமாக இருந்தனர். இந்தச் சூழலில் தான் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உரிமை தொகை: இந்தாண்டு செப். மாதம் முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்குக் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். மேலும், இதில் தகுதியான பயனாளிகள் அனைவரும் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களைக் கொடுக்கும் நடைமுறை ரேஷன் கடைகளில் நடந்து வருகிறது. இதற்கான விண்ணப்பப் படிவத்தில் மொத்தம் 13 வகையான கேள்விகள் உள்ளன.. ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களும் இந்த விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தத் திட்டத்தில் யார் தகுதி பெறுவார்கள்.. யார் தகுதி பெற மாட்டார்கள் என்பது குறித்த தகவல்களும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் எ.வ.வேலு: இதற்கிடையே குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்கும் உரிமை தொகை திட்டம் குறித்து அமைச்சர் எ.வ. வேலு சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். திருப்பத்தூர் ஆம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் விழா வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினார். அதன் பிறகு அங்குப் பேசிய எ.வ.வேலு உரிமை தொகை குறித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
யாருக்குக் கிடைக்காது: அதாவது வசதி படைத்தவர்களுக்கு எல்லாம் ரூ. 1000 உரிமை தொகை கிடைக்காது என்று அவர் குறிப்பிட்டார்… அவர் மேலும் கூறுகையில், “இந்த ரூ. 1000ஐ நம்பி தான் குடும்பம் நடத்த வேண்டும் என்ற சூழலில் உள்ளவர்களுக்கு நிச்சயம் இந்த தொகை வழங்கப்படும். அதேநேரம் வசதியானவர்களுக்கும் இது செல்வது சரியாக இருக்காது. இதன் காரணமாகத் தகுதியானவர்களுக்கு இந்த உரிமை தொகை மாதாமாதம் வரும் என்று நமது முதல்வர் சொல்லியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்
தமிழ்நாடு அரசு இந்த உரிமை தொகை திட்டத்திற்குப் பல நிபந்தனைகளை விதித்துள்ளது. அதாவது ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இது கிடைக்காது. மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரிவோர் இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெற முடியாது. சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிகாக்டர் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போரும் விண்ணப்பிக்க முடியாது.
கட்டுப்பாடுகள்: ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா நல வாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர், அரசிடம் இருந்து பென்சன் பெறும் குடும்பங்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள். ஆண்டிற்கு 3600 யூனிட் மேல், அதாவது இரண்டு மாதத்திற்கு 600 யூனிட்டிற்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கும் இந்த உரிமை தொகை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.