நியூயார்க்,-அமெரிக்காவில், விமானத்தில் பயணித்த தாய், மகளுக்கு குடிபோதையில் இருந்த சக பயணி பாலியல் தொந்தரவு அளித்தார். அந்த பயணி மீது நடவடிக்கை எடுக்காத விமான நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து, ஐரோப்பிய நாடான கிரீஸ் தலைநகர் ஏதென்சுக்கு, சமீபத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. இதில் ஒரு பெண், தன் 16 வயது மகளுடன் பயணித்தார்.
அவர்களுக்கு அருகே அமர்ந்திருந்த சக ஆண் பயணி ஒருவர் குடிபோதையில் இருந்ததுடன், அவர்களுக்கு பாலியல் தொந்தரவும் அளித்தார்.
இதுகுறித்து விமான ஊழியர்களிடம் அந்த பெண் முறையிட்டார். பொறுமையாக இருக்கும்படி கூறி, விமான ஊழியர்கள் அந்த பெண்ணை அமர வைத்தனர். எனினும், அந்த பயணி வரம்பு மீறி தொடர்ந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார்.
மீண்டும், அந்த பெண் புகார் அளித்தும், விமான ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை. குடிபோதையில் இருந்த பயணியின் விருப்பத்திற்கு ஏற்ப கூடுதலாக மதுபானம் வழங்கினர். இதனால் அந்த பெண் ஆத்திரம் அடைந்தார்.
இதை அருகில் இருந்து பார்த்த மற்றொரு பயணி, அவரது இருக்கையில் அந்த பெண்ணின் மகளை அமர செய்ததுடன், குடிபோதையில் இருந்த பயணிக்கு அருகே அவர் அமர்ந்தார்.
ஏதென்ஸ் நகரில் விமானம் தரையிறங்கியதும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட விமான ஊழியர்கள், அவர்களுக்கு இலவச விமான பயணம் மேற்கொள்ளவும் சலுகை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
இதனால் கடும் மன உலைச்சலுக்கு உள்ளான அந்த பெண், தவறாக நடந்த நபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது, 16.45 கோடி ரூபாய் கேட்டு, மான நஷ்டஈடு வழக்கு தொடுத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement