மைசூரு : மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில், கைதான பயங்கரவாதி ஷாரிக்கை, மைசூருக்கு அழைத்து சென்று, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மங்களூரு கங்கனாடி பகுதியில், கடந்த 2022 ம் ஆண்டு நவம்பர் 20 ம் தேதி, ஆட்டோ ஒன்று திடீரென வெடித்து சிதறியது. ஆட்டோ டிரைவர் புருஷோத்தம், ஆட்டோவில் பயணம் செய்த வாலிபர் படுகாயம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது தெரிந்தது.
படுகாயம் அடைந்த வாலிபர் ஷிவமொகாவின் ஷாரிக், 23 என்பதும், பயங்கரவாதி என்றும் தெரிந்தது. மைசூரில் குக்கர் வெடிகுண்டு தயாரித்து, மங்களூரு வெடிக்க வைக்க எடுத்து வந்ததும் தெரிந்தது. இவ்வழக்கு என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு துறை விசாரணைக்கு மாற்றப்பட்டது.
விசாரணைக்கு பின்னர் ஷாரிக், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு தொடர்பாக ஷாரிக்கிடம் இருந்து, சில தகவல்கள் என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தேவைப்பட்டது. இதனால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, ஷாரிக்கை தங்களது காவலில் எடுத்தனர்.
இந்நிலையில் நேற்று ஷாரிக்கை, மைசூருக்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் அழைத்து சென்றனர். மைசூரில் அவர் வசித்த வீடு, மைசூரில் இருந்து மடிகேரிக்கு அவர் பஸ் ஏறிய இடம், மடிகேரியில் இருந்து மங்களூருக்கு வந்திறங்கிய இடம், ஆட்டோவில் சென்ற இடங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
இதன்மூலம் இவ்வழக்கில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement