வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டாக்கா: ,-வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தை போலீசார் தடுத்தி நிறுத்தியபோது, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி நடக்கிறது. அடுத்த ஆண்டு இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த 2018ல் நடந்த பொதுத்தேர்தலில், ஷேக் ஹசீனா, ஓட்டுப்பதிவில் மோசடி செய்ததாக, அந்நாட்டு பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தலைமையிலான அக்கட்சி, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் நியாயமான தேர்தலை உறுதி செய்ய, தேர்தல் காலத்தில் கட்சி சார்பற்ற காபந்து அரசை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பான போராட்டங்களும் நடந்து வருகின்றன.
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி, டாக்காவின் எல்லைப்பகுதியில் குவிந்த வங்கதேச தேசியவாத கட்சியின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து, ஊர்வலமாக சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
யாரும் கலைந்து செல்லாததால், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, எதிர்க்கட்சியின் ஆதரவாளர்களும் போலீசார் மீது கற்களை எறிந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன. இருதரப்பினரின் மோதலால் டாக்காவின் பல இடங்கள் போர்க்களமாக மாறின.
ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டத்தில், போலீசார் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எதிர்க்கட்சியினர் போராட்டத்தால் வங்கதேசத்தின் பல இடங்களில் பதற்றம் நிலவும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement