ஒரு பைசா லஞ்சம் இல்லாமல்.. டாஸ்மாக்கில் நடந்த "முதல்" டிரான்ஸ்பர்.. மாஸ் காட்டிய உதயநிதி!

சென்னை:
டாஸ்மாக் வரலாற்றிலேயே முதன்முறையாக எந்த லஞ்ச லாவண்யமும் இன்றி 2000-க்கும் மேற்பட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பின்னால் அமைச்சர் உதயநிதியின் கை இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலாக டாஸ்மாக் தொடர்பாக அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வந்தன. படிப்படியாக மதுவிலக்கு எனக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட் நிர்ணயித்தது; காலி பாட்டில்களை ஏலம் விடும் விவகாரம்; பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வசூலிப்பது என எதிர்மறையான விஷயங்கள் நிறைய இருந்தன.

இந்நிலையில், செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு பிறகு, மதுவிலக்கு துறையை கையில் எடுத்த அமைச்சர் முத்துசாமிக்கு முதல்வர் போட்ட முதல் உத்தரவே, டாஸ்மாக் தொடர்பாக மக்கள் மனதில் இருக்கும் அதிருப்திகளை நீக்க வேண்டும் என்பதுதான். இதன்பேரில் பல அதிரடியான மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது முதல் காலி பாட்டில்களை வாங்கும் திட்டம் வரை அடுத்தடுத்து பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

டாஸ்மாக் விஷயத்தில் இனி எந்த தவறான விஷயங்களும் நடந்துவிட கூடாது என்பதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவனமாக இருப்பதாகவும், அவரது அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த மாற்றங்கள் அரங்கேறி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், டாஸ்மாக்கில் 2,444 ஊழியர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு ரூபாய் கூட லஞ்சப்பணம் கைமாறாமல் இந்த டிரான்ஸ்பர் நடந்திருக்கிறது என்பதுதான்.

முதன்முறையாக கவுன்சிலிங் முறையில் இந்த டிரான்ஸ்பர்கள் நடந்திருக்கின்றன. இதற்கு முன்பு வரை விருப்ப டிரான்ஸ்பர்களுக்கு இடமாறுதல் செய்யப்படும் கடையின் அளவு, அங்கு கிடைக்கும் வருவாய் ஆகிய அம்சங்களை பொறுத்து ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் கேட்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமியின் மேற்பார்வையில் எந்த முறைகேடும் இல்லாமல் இந்த டிரான்ஸ்பர்கள் நடைபெற்றுள்ளன. இதனால் டிரான்ஸ்பர் கிடைத்த ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.