`நான் மாறியதற்குக் காரணம் 'பேரன்பு' படம்!' 'தங்க மீன்கள்' சாதனா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

`மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று!’ என்ற இந்த வரிகளை உச்சரித்தாலே நம் கண் முன் வந்து நின்று விடுவார் ‘தங்க மீன்கள்’ சாதனா. ‘ஆனந்த யாழை மீட்டிய’ நாட்களில் குழந்தையாக இருந்த அவர் இப்போது மாஸ்டர் டிகிரி வகுப்புக்குச் செல்லக் காத்திருக்கும் மாணவி.

`தங்க மீன்கள்’ சாதனா

அப்பா-மகள் சப்ஜெக்டைப் பேசிய இரண்டே இரண்டு படங்களில் நடித்து, நடிப்புக்காகத் தேசிய விருதையும் வாங்கியவர். ஆனாலும், ‘சினிமா வேண்டாம்’ என துபாயில் செட்டிலாகி படிப்பு, நடனம் என கவனம் செலுத்தி வருகிற நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்னை வந்திருக்கிறார். அண்ணா நகரில் தன் பாட்டி வீட்டிலிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.

”செல்லம்மா, பாப்பா, எனத் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இரண்டு பாத்திரங்களில் நடித்துவிட்டு சத்தமில்லாமல் துபாய்ல என்ன பண்ணிட்டிருக்கீங்க?

”என்னுடைய அப்பா அங்கதான் வேலை பார்க்கிறார். அதனால குடும்பம் அங்க இருக்கவேண்டிய சூழல். சினிமாங்கிறது என்னுடைய வாழ்க்கையில் திடீர்னு நிகழ்ந்த ஒரு மேஜிக்தான். ரெண்டு படங்கள்ல எனக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு என்ன தேவையோ அதை முழுசா கொடுத்து நடிச்சேன். அந்தப் படங்கள் நல்ல பெயரை வாங்கித் தந்தன. ஆனா தொடர்ந்து சினிமாவுலயே, அதாவது லைம்லைட்லயே இருக்கணும்னு ஏனோ எனக்குத் தோணல.

அதனால அங்க மீடியா சார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்து படிச்சேன். கூடவே எனக்குப் பிடிச்ச பரதநாட்டியத்தையும் விடல. போன வருஷத்துடன் காலேஜ் முடிஞ்சது. அடுத்ததா போஸ்ட் கிராஜுவேட்ல ‘ஆக்குபேஷனல் தெரபி’ன்னு ஒரு பாடம் எடுத்துப் படிக்கப் போறேன். அடுத்த மாசத்துல இருந்து அந்தப் படிப்பு தொடங்க இருக்கு. சிறப்புத் திறன் குழந்தைகளைக் கையாள்வது தொடர்பான பயிற்சி”

”மீடியாவுல இருந்து ஆக்குபேஷனல் தெரபியா? ஏன்?”

”நான் எந்தவொரு முடிவு எடுக்கிறப்பவும் ராம் சார்கிட்ட கன்சல்ட் பண்றதை வழக்கமா வச்சிருக்கேன். இந்த விஷயத்தைச் சொன்னதும் ‘நீ இப்படியொரு ரூட்டுக்குத் திரும்புவன்னு எனக்குத் தெரியும்’னார்.

மீடியா டு ஆக்குபேஷனல் தெரபி ஏன்னுதானே கேக்கறீங்க. எனக்கே இன்னும் முழுசா காரணம் தெரியல. ஆனா ‘பேரன்பு’ படம் ஒரு காரணமா இருக்கலாம்னு தோணுது. அந்தப் படத்துல சிறப்புத் திறன் குழந்தையா நடிச்சப்ப, அந்த மாதிரியான குழந்தைகளின் வாழ்க்கை பத்தி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. படம் முடிஞ்ச பிறகுமே அந்த நினைவுகள்ல இருந்து என்னால மீள முடியல. அந்தக் குழந்தைகளுடனேயே பயணிக்கணும்னு மனசுல தோணுச்சு. அதன் போக்குல பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன்”

தங்கமீன்கள் படத்தில்

”என்ன நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்திருக்கீங்க?”

” `ராம நாமமே தாரக மந்திரம்’ங்கிறது நிகழ்ச்சியின் பெயர். ராம நாமத்தின் மகிமையை பரத நாட்டியம் மூலமா சொல்கிற நிகழ்ச்சி. என்னுடைய நடன குருவான என் அம்மாதான் நிகழ்ச்சியை ஒருங்கிணைச்சு நடத்த இருக்காங்க. சூப்பர் சிங்கர் 7வது சீசனில் டைட்டில் வென்ற சாய்பிரசாத் மியூசிக் கம்போஸ் பண்ணுகிற என்னுடைய இந்த சோலோ நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை (4/8/23) சென்னையில் நடக்க இருக்கு”

“குழந்தை நட்சத்திரமா தமிழ் சினிமாவுல நடிச்ச எத்தனையோ பேர் பிறகு ஹீரோயினாகவும் வந்திருக்காங்க. ஹீரோயினா உங்களுக்கு வாய்ப்பு வந்தா?”

பேரன்பு படத்தில்

”நாளைக்கு நடப்பது குறித்து இன்னைக்கு என்ன சொல்வது? வாய்ப்பு வந்தா வரும் போது பார்க்கலாம். இப்போதைக்கு என் கவனம் நடனம் ப்ளஸ் என்னுடைய படிப்புதான். நடனத்துல இன்னொரு முக்கியமான தருணத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கேன். அது, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கறப்ப அங்க என் நடனம் இருக்கும்னு நம்புகிறேன். அதுக்கான முயற்சிகள் நடந்துகிட்டிருக்கு” 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.