புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் வரும் 8-ம் தேதி தொடங்கும் என்றும் 10-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி விவாதத்துக்கு பதில் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூலை 26-ம் தேதி மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் நோட்டீஸ் வழங்கினார். 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டியா’ கூட்டணி சார்பில் வழங்கப்பட்டுள்ள இந்த நோட்டீஸை ஏற்றுக் கொண்ட மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் வரும் 8-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவாதம் 9-ம் தேதியும் தொடரும் என்றும் 10-ம் தேதி பிரதமர் மோடி விவாதத்துக்கு பதில் அளிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற மக்களவை அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மக்களவையில் மொத்தம் 543 இடங்கள் உள்ளன. இதில் 5 இடங்கள் காலியாக உள்ளன. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 330 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இண்டியா கூட்டணி கட்சிகளின் பலம் 140-க்கும் சற்று கூடுதலாக உள்ளது. மீதம் உள்ள 60-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த 2 கூட்டணியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும் என்பது உறுதி. ஆனாலும், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை மக்களவையில் பேச வைப்பதற்காகவே இந்ததீர்மானத்தைக் கொண்டுவந் துள்ளதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.