புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலையிட வேண்டும் என்று ’இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள் இன்று அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சிகளின் சார்பாக குடியரசுத் தலைவரைச் சந்திக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேரம் கேட்டிருந்தார். அதன்படி, ‘இண்டியா’ கூட்டணி சார்பில் 21 எம்.பி.க்கள் குழு இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தனர். அப்போது மணிப்பூர் வன்முறை குறித்து குடியரசுத் தலைவரிடம் மல்லிகார்ஜுன கார்கேவும், காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் விளக்கிக் கூறினர். தொடர்ந்து மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தச் சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “எதிர்க்கட்சிகளின் சார்பில் மணிப்பூர் சென்று வந்த 21 எம்.பி.க்கள் உட்பட, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 31 எம்.பி.க்கள் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்தோம். அவரிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தோம். அப்போது, மணிப்பூர் நிலவரம் குறித்து, குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை, மறுவாழ்வு மற்றும் பிற நிலவரங்கள் குறித்து நாங்கள் விளக்கினோம். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மாநிலத்தில் அமைதி ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களுடைய மிக முக்கியமான கோரிக்கை” என்று தெரிவித்தார்.
மணிப்பூர் சென்ற இண்டியா எம்.பி.க்கள் குழு: முன்னதாக, இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தின் கள நிலவரத்தை நேரில் ஆய்வு செய்ய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 21 எம்பிக்கள் குழு இரண்டு நாள் பயணமாக கடந்த மாதம் 29, 30 தேதிகளில் மணிப்பூர் சென்றது. அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் துயரங்களைக் கேட்டறிந்தது. பின்னர் மாநில ஆளுநரைச் சந்தித்து தங்களது ஆய்வறிக்கையை வழங்கிய எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு, மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டன.
மணிப்பூர் கலவரம்: மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கியுள்ளதாக கூறிய உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணையின் போது, டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம்: மணிப்பூர் மாநிலத்தில் அரசு இயந்திரம் முற்றிலுமாக முடங்கிவிட்டது: டிஜிபி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு