மைசூருவில் வக்கீலே இல்லாமல் கோர்ட்டில் தானே வாதாடி வெற்றிபெற்ற தொழில் அதிபர்

மைசூரு:-

நில மோசடி

மைசூரு டவுன் கே.ஆர்.மொகல்லா பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணப்பா நந்தா. தொழில் அதிபரான இவர் மைசூரு (மாவட்டம்) தாலுகா ராமனஹள்ளி அருகே பெலவாடி கிராமத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சொந்தமாக நிலம் வாங்க முயன்றார். அப்போது அவரை ‘டெரகான் ரெசிடன்சி’ என்ற நிறுவனம் தொடர்பு கொண்டது.

மேலும் தங்களது நிறுவனம் சார்பில் வீட்டு மனைகள் விற்கப்படுவதாகவும், தலா ரூ.5.10 லட்சத்தை 3 தவணைகளாக ஒரு வருடத்தில் செலுத்தினால், அதற்கு அடுத்த வருடம் பத்திரப்பதிவு செய்து தரப்படும் என்று நிறுவனத்தார் கூறினர். அதாவது அந்த நிறுவனம் சார்பில் வீடுகள் கட்டி விற்கப்பட்டு வருகிறது. அதனால் முதல் கட்ட கட்டிடப்பணி முடிந்ததும் பத்திரப்பதிவு செய்து தரப்படும் என்று ராமகிருஷ்ணப்பா நந்தாவிடம் அவர்கள் தெரிவித்தனர்.

வழக்கு

அதை நம்பிய ராமகிருஷ்ணப்பா நந்தா, 3 தவணைகளாக தலா ரூ.5.10 லட்சம் என ரூ.15.30 லட்சத்தை அந்த நிறுவனத்திடம் கொடுத்து ஒரு இடம் வாங்கினார். அவருக்கு 513-வது எண் வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அங்கு கட்டிடப்பணி எதுவும் முறையாக நடக்கவில்லை. மேலும் ராமகிருஷ்ணப்பா நந்தாவுக்கு அவர்கள் அந்த நிலத்தை பத்திரப்பதிவும் செய்து கொடுக்கவில்லை என்று தெரிகிறது. சுமார் 5 வருடங்களாக இதே நிலை நீடித்தது. மேலும் அந்த நிறுவனத்தார், வீட்டுமனைகள் அமைந்திருக்கும் வரைபடத்தையும் ராமகிருஷ்ணப்பா நந்தாவுக்கு தெரியாமல் மாற்றி உள்ளனர்.

தான் நில மோசடியில் சிக்கியதை உணர்ந்த ராமகிருஷ்ணப்பா நந்தா உடனே மைசூரு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் நிதி இழப்பு ஆகியவற்றை வட்டியுடன் டெரகான் ரெசிடன்சி திருப்பி வழங்கிட உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி இதுபற்றி விசாரித்தார்.

தானே வாதாடினார்

இந்த வழக்கில் ராமகிருஷ்ணப்பா நந்தாவே தனக்காக வாதாடினார். அவர் வக்கீல் யாரையும் நியமிக்கவில்லை. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது ராமகிருஷ்ணப்பா நந்தாவை, டெரகான் ரெசிடன்சி நிறுவனம் ஏமாற்றி இருப்பது நிரூபணமாகி இருப்பதால் அந்த நிறுவனத்துக்கு ரூ.63 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அதாவது ராமகிருஷ்ணப்பா நந்தாவுக்கு ஏற்பட்ட நிதி இழப்புக்கு ரூ.50 ஆயிரம், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவாக ரூ.3 ஆயிரம் என ரூ.63 ஆயிரத்தை மொத்தமாக அந்த நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் ராமகிருஷ்ணப்பா நந்தா செலுத்திய ரூ.15.30 லட்சத்தை 8 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்திட வேண்டும் என்றும் டெரகான் ரெசிடன்சி நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். தனக்கென வக்கீல் யாரையும் நியமிக்காமல் தானாகவே வழக்கில் வாதாடி வெற்றிபெற்ற ராமகிருஷ்ணப்பா நந்தாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.