புதுச்சேரி: புதுச்சேரி பல்கலையில் ரூ. 2.25 கோடிக்கு போலி பில் தயாரித்து மோசடி செய்த புகார் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு, மனித வள மேம்பாட்டு மையம் மூலம் புத்தாக்க பயிற்சி அளிக்க மத்திய அரசு நிதி அளிக்கிறது. அதன்படி, கடந்த 2008 முதல் 2016ம் ஆண்டு வரை புத்தாக்க பயிற்சி அளிக்க ரூ. 5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி நடத்திய கணக்குகளில் ரூ. 2.25 கோடிக்கு போலி பில் வைத்திருப்பது, பல்கலையில் நடக்கும் ஆண்டு தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பல்கலை நிர்வாகம் அமைத்த விசாரணை குழு, புகாரை ஆய்வு செய்து, மோசடி எதுவும் நடைபெறவில்லை என துணை வேந்தருக்கு அறிக்கை அளித்தது.
இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக துணை வேந்தர், நிதி நிர்வாக அதிகாரி மற்றும் மனிதவள மேம்பாட்டு இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சி.பி.ஐ.,யில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்யவில்லை.
அதனைத் தொடர்ந்து, புகார் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டி, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பல்கலையில் புத்தாக்க பயிற்சி நடத்திய கணக்குகளில் போலி பில் வைத்ததற்கான முகாந்திரம் இருப்பதாக சி.பி.ஐ., அறிக்கை அளித்துள்ளதால் இந்த புகார் மீது சி.பி.ஐ. வழக்கு பதிந்து விசாரிக்க உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement