புதுடில்லி, தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
‘குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுத்து விசாரிப்பது என்பது அமலாக்கத் துறைக்கு இருக்கும் உரிமை. அதை யாராலும் மறுக்க முடியாது’ என, அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசில் அமைச்சராக பதவி வகிப்பவர் செந்தில் பாலாஜி. இவர், 2011 – 16ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.
இடையூறு
அவரை கைது செய்தது சட்டவிரோதமானது என செந்தில் பாலாஜியும், அவரது மனைவி மேகலாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து, செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அமலாக்கத் துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியும் ஆஜராகினர்.
‘சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவரை, காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை’ என, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று வாதிட்டதாவது:
செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை எங்களால் விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை. விசாரணையை நடத்தவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார்.
செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலங்களை பெற முயற்சித்தோம். ஆனால், அவர் ஒத்துழைப்பு தரவில்லை. இதனால்தான் அவரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் அவர் ஈடுபட்டிருப்பார் என்ற சந்தேகத்துக்கு வலுவான காரணங்கள் இருந்ததால்தான் உரிய விதிமுறைகளை பின்பற்றி கைது செய்தோம்.
ஒத்திவைப்பு
இந்த வழக்கில், செந்தில் பாலாஜியை தனிப்பட்ட முறையில் காவலில் எடுத்து விசாரிப்பது மிகவும் முக்கியமானது. ஒருவர் நீதிமன்ற காவலில் இருக்கும்போது அவரை ஒப்படைக்க கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை.
அந்த வகையில் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் எடுத்து விசாரிப்பது என்பது அமலாக்கத் துறைக்கு இருக்கும் உரிமை. அதை யாராலும் மறுக்க முடியாது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்