வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸால் கைது செய்து ஜாமினில் விடுவிக்கப்பட்ட அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஈஸ்வரனின் சம்பளம் 82 சதவீதம் குறைக்கப்பட்டு 6,300 சிங்கப்பூர் டாலர் வழங்கப்படுகிறது.
சிங்கப்பூரின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் ஈஸ்வரன்,61. ஆளும் மக்கள் நடவடிக்கை கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவரை, அந்த நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதன் பின் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 2021 ல் இருந்து போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வரும் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதற்கான காரணம் எதையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், கட்டாய விடுப்பில் செல்லும்படி ஈஸ்வரனை, சிங்கப்பூர் பிரதமர் லீ ஹூசேன் லூங் உத்தரவிட்டிருந்தார். அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், லீஹூசேன் லூங் பார்லிமென்டில் பேசும்போது கூறியதாவது: ஈஸ்வரனுக்கு வழங்கப்பட்டு வந்த 46,750 சிங்கப்பூர் டாலர் மாத சம்பளம், குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, 6,300 சிங்கப்பூர் டாலர் வழங்கப்படுகிறது. ஊழல் விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருவதால், இந்த விவகாரத்தில் மேலும் தகவல் தெரிவிக்க முடியாது. அமைச்சர்கள் மீது ஊழல் புகார் வருவது அரிதானது. இதனால், அரசியல் பதவியில் இருப்பவர்களுக்கு எப்படி தடை விதிக்க வேண்டும் என்பதற்கு எந்த விதியோ, முன்னுதாரணமோ ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement