சென்னை: ஆடவருக்கான 7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னையில் நேற்று (ஆக.3) தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா – சீனா அணிகளுக்கு இடையிலான போட்டியை மாணவர்களுடன் அமர்ந்து பார்த்திருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்தியா – சீனா இடையிலான போட்டியில் இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தினமும் 100 மாணவர்கள்: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, “சென்னையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை போட்டியை காண அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்கள் தொகுதியில் குறைந்தது 100 குழந்தைகளை அழைத்து வருமாறு அறிவுறுத்தி உள்ளோம்” என தெரிவித்தார்.
அதன்படி தனது சட்டப்பேரவை தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியை சேர்ந்த 50 மாணவ – மாணவிகள் போட்டியை நேரில் காணும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார். மாணவர்களுடன் அமர்ந்து இந்தியா – சீனா அணிகள் விளையாடிய போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்த்திருந்தார். அது குறித்து ட்வீட்டும் செய்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனின் போதும் விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டிகளை பார்த்து ரசித்தது குறிப்பிடத்தக்கது.
#ChepaukTriplicane தொகுதி, லாக் நகரில் ஹாக்கி விளையாட்டில் ஈடுபாடும் – ஆர்வமும் கொண்ட 50 மாணவ – மாணவிகளை #AsianChampionshipTrophy போட்டியை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேரில் காண ஏற்பாடு செய்தோம். அதன்படி, நடைபெற்ற இந்தியா – சீனா அணிகளுக்கு இடையேயான ஹாக்கிப் போட்டியை… pic.twitter.com/pdTbazqo8J
— Udhay (@Udhaystalin) August 3, 2023