கோலிவுட்டில் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் யாருக்கு என்ற களேபரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
விஜய்யின் ‘வாரிசு’ பட சமயத்தில் அதன் தயாரிப்பாளர் தில் ராஜு, ‘விஜய்தான் சூப்பர் ஸ்டார்’ எனக் கொளுத்திப் போட்டார். இதையடுத்து பலரும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜயா, அஜித்தா என சமூக வலைதளங்களில் மாறிமாறி பதிவிட்டு வைரலாக்கினார். இது ரஜினியின் காதுவரை செல்ல, சமீபத்தில் நடந்த ‘ஜெயிலர்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இது குறித்துப் பேசியிருந்தார்.

இதுகுறித்து பேசிய ரஜினி, “சூப்பர் ஸ்டார் பட்டத்துக்குப் பிரச்னை இப்ப இல்ல 1977 லயே ஆரம்பிச்சிருச்சு. அப்ப எனக்கு ஒரு படத்துல சூப்பர் ஸ்டார்னு டைட்டில் போட்டப்ப நானே வேணாம்னு சொன்னேன். ஏன்னா, அப்ப கமல் ரொம்ப பெரிய உயரத்துல இருந்தாரு. சிவாஜியும் ஹீரோவா நடிச்சிட்டு இருந்தாரு. அதனால சூப்பர் ஸ்டார் பட்டம் வேணாம்னு சொன்னேன். ஆனா, ரஜினி பயந்துட்டாருன்னு சொன்னாங்க. நாம பயப்படுறது ரெண்டே பேருக்குதான். ஒண்ணு அந்த பரம்பொருள் கடவுளுக்கு இன்னொன்னு நல்லவங்களுக்கு. மற்றபடி யாருக்கும் பயப்படுறதில்ல” என்று வெளிப்படையாகப் பேசியிருந்தார்.
இதனால் இந்தச் சர்ச்சை இன்னும் ரசிகர்களிடையே சூடுபிடிக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து திரை வட்டாரங்கள் பலரும் இதுகுறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில், அண்மையில் பாண்டிச்சேரி நகைக்கடை ஒன்றில் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரபு, “எங்க அண்ணன் ரஜினிதான் சூப்பர் ஸ்டார். மற்றவர்கள் எல்லாம் சூப்பர் நடிகர்கள். விஜய், அஜித் இந்த இடத்திற்கு வருவதென்றால் வரட்டுமே, அதில் என்ன இருக்கிறது. என் அண்ணன் ரஜினியும் ‘இந்த இடத்திற்கு யார் வேண்டுமானாலும் வரட்டும்’ என்றுதான் சொல்கிறார். அவரும் அடுத்த தலைமுறையினருக்கு வழியைத்தான் விடுகிறார். விஜய், அஜித் என எல்லோரும் வரட்டும். யார் வந்தாலும் சந்தோஷம்தான்” என்று கூறியிருக்கிறார்.
அதேபோல், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்துப் பேசியவர், “விஜய் தாராளமாக அரசியலுக்கு வரட்டும். அதை நான் வரவேற்கிறேன்” என்றார். மேலும், தமிழ்த் திரைப்படங்கள் குறித்துப் பேசுகையில், “தென்னிந்தியத் திரைப்படங்கள், குறிப்பாகத் தமிழ்ப் படங்கள் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. வட இந்தியாவில் நம் படங்களை விரும்பிப் பார்க்கிறார்கள்” என்று கூறினார்.