எடப்பாடியின் அருமை தெரியாத அண்ணாமலை: மீண்டும் அதிமுக – பாஜக இடையே டிஸ்யூம்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம்பெற்றுள்ள போதும், டெல்லியில் நடைபெற்ற அதன் ஆலோசனைக் கூட்டத்தில்

பங்கேற்ற போதும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது.

எப்போது முதல் இந்த நிலை என்று கேட்டால், தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை எப்போது பதவியேற்றாரோ அப்போதிருந்து என்று அடித்துச் சொல்கிறார்கள் அதிமுகவினர்.

திமுகவை விமர்சிப்பது போல் கூட்டணியில் இருக்கும் அதிமுகவையும் விமர்சிப்பதையும், எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை அவமதிப்பதையும் எப்படி கூட்டணிக் கட்சி என்று எடுத்துக் கொள்வது என விழி பிதுங்குகிறார்கள் அதிமுகவினர்.

ஜெயலலிதாவை விமர்சித்து அண்ணாமலை பேட்டியளித்த பின்னர் இனியும் பொறுத்திருக்க முடியாது என அதிமுகவினர் தங்கள் எதிர்ப்பை அண்ணாமலையை நோக்கி முழுவீச்சில் திருப்பினர்.அவருக்கு எதிராக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் சமாதானம் பேசப்பட தற்காலிகமாக உறவு சரி செய்யப்பட்டது.

அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ என்ற பாதை யாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்து அமித் ஷா தொடங்கி வைத்தார். இதன் தொடக்க நிகழ்வுக்கு கூட்டணிக் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அமித் ஷா கலந்து கொள்ளும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டால் அண்ணாமலையின் சர்ச்சைகளுக்கு முடிவு கட்டி இருதரப்பையும் கை குலுக்க வைக்கலாம் என்று டெல்லி தரப்பு கருதியது. ஆனால் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டார்.

சுற்றுபயணத்தை முடித்து விட்டு டெல்லி புறப்பட்ட அமித்ஷா

இதனால் இரு தரப்பும் தொடர்ந்து எதிரும் புதிருமாக இருக்கும் நிலையே உள்ளது. இந்த சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுன் பேச்சு அதற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

“எங்களைப் பொறுத்தவரையில் அண்ணாமலை பாஜகவின் மாநிலத் தலைவர், Just like அவ்வளவு தான். எங்களுக்கு மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா தான் முக்கியம். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தில் அருகே அழைத்து பக்கத்தில் அமர வைத்த மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிச்சாமியின் அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை” என்று பேசினார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக-பாஜக இடையே இன்னும் சுமுக உறவு ஏற்படாதது களத்தில் திமுகவுக்கு சாதகமாக அமையும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.