"பெரிய போலீஸுனு நெனைப்பு".. என்சிசி மாணவர்களை கொட்டும் மழையில் கொடூரமாக தாக்கிய சீனியர் மாணவர்..

தானே:
என்சிசி மாணவர்களை கொட்டும் மழையில் படுக்க வைத்த சீனியர் மாணவர் ஒருவர், அவர்களை லத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அனைவரையும் அதிரச் செய்துள்ளது.

ஒழுக்கம், தேசப்பற்று, சேவை உள்ளிட்ட பண்புகளை மாணவர்களிடம் வளர்ப்பதற்காக பள்ளி, கல்லூரிகளில் என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட் போன்ற அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்கள், எதிர்காலத்தில் காவல்துறை, ராணுவம் போன்ற பணிகளுக்கு முயற்சிக்கும் போது இந்த சான்றிதழ்கள் ஓரளவுக்கு கருத்தில் கொள்ளப்படும். குறிப்பாக, என்சிசி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த என்சிசியில் பயிற்சி பெறும் மாணவர்களிடத்தில் எப்போதுமே ஒரு தனிமனித ஒழுக்கத்தை பார்க்க முடியும். ஆனால் இதற்கு விதிவிலக்கான சில ஜென்மங்களும் இருக்கவே செய்கின்றன. அப்படி ஒரு விதிவிலக்கு கேஸ் செய்த சம்பவம்தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசு விழாவில் இன்பநிதிக்கு என்ன வேலை..? “பட்டா போட்டு கொடுத்துருக்கா”.. எகிறிய சீமான்

மகாராஷ்ட்ரா மாநிலம் தானேவில் பந்தோத்கர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள என்சிசி மாணவர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதில் அணிவகுப்பு பயிற்சியின் போது சில மாணவர்கள் சரியாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. பொதுவாக, இவ்வாறு தவறு செய்யும் என்சிசி மாணவர்களை மைதானத்தில் ஓடவிடுவது; கைகளை தூக்கி நிற்க வைப்பது போன்ற தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்தக் கல்லூரியின் என்சிசி சீனியர் மாணவர், தன்னை தானே போலீஸ் அதிகாரியாக கற்பனை செய்து கொண்டு, அந்த மாணவர்களை தனியே அழைத்து ஓரிடத்தில் குப்புற படுக்க வைத்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இருந்தபோதிலும், மண்ணில் அந்த மாணவர்களை படுத்த வைத்த அவர், லத்தியை எடுத்து அந்த மாணவர்களின் பின்பகுதியில் கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் அவர்களால் வலியால் துடித்தனர். இருந்தபோதிலும், அந்த மாணவர் அவர்களை அடித்துக் கொண்டே இருந்தார்.

இதனை அங்கிருந்த மற்ற வகுப்பு மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏதோ ரவுடிகளை அடிப்பது போல என்சிசி மாணவர்கள் தாக்கப்படுவதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அந்தக் கல்லூரியின் முதல்வர் சுசித்ரா நாயக் கூறுகையில், “மனநலம் பாதிக்கப்பட்ட நபரை போல சீனியர் என்சிசி மாணவர் நடந்து கொண்டிருக்கிறார். சக மாணவர்களை அவர் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் காவல்துறையிலும் புகார் அளிக்கப்படும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.