அலகாபாத்: உ.பி.,யின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
உ.பி.,யில் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் அருகே, மிகப் பழமையான ஞானவாபி மசூதி உள்ளது. இங்கு, ஹிந்து கடவுள் சிலைகள் இருப்பதாக கூறிய ஹிந்து அமைப்பினர், அங்கு வழிபாடு நடத்த அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, ‛வீடியோ’ பதிவு செய்து ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆய்வின் போது, மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து, இங்கு தொல்லியல் துறையினர் அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்த, ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், ‛மசூதிக்குள் இருக்கும் நீரூற்றை தான் சிவலிங்கம் என்று கூறுகின்றனர். எனவே, அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு அனுமதி அளிக்கக்கூடாது ‘ என, மசூதி நிர்வாக கமிட்டி தரப்பு வாதிட்டது.
இதை ஏற்க மறுத்த வாரணாசி நீதிமன்றம், தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுமதி அளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
கடந்த 24 ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தொல்லியல் துறை ஆய்வு நடத்த 26ம் தேதி மாலை வரை தடை விதித்ததுடன், அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடும்படி மசூதி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு ஜூலை 27 ல் விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், இன்று( ஆக.,3 ) இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ‛ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுமதி வழங்கியதுடன், மசூதி நிர்வாகம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்