அமைச்சர்களின் செயல்பாட்டால், அதிருப்தி அடைந்துள்ள கர்நாடகா எம்.எல்.ஏ.,க்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் டில்லியில் நேற்று, ‘பஞ்சாயத்து’ பேசி சமாதானப்படுத்தினர். மேலும், ‘அனைவரும் அதிருப்தியை ஓரங்கட்டி லோக்சபா தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு உழையுங்கள்’ என்றும் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்து இரண்டு மாதங்களிலேயே உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. அதுவும் அமைச்சர்கள் மீது, சொந்த கட்சி எம்.எல்.ஏ.,க்களே புகார் கூறி, போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
‘தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு அமைச்சர்கள் நிதி ஒதுக்கவில்லை. அப்படி நிதி வழங்குவதற்கு, மூன்றாம் நபர் வாயிலாக அமைச்சர்கள் கமிஷன் கேட்கின்றனர்’ என, 25க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் சித்தராமையாவிடம் புகார் செய்தனர்.
* டில்லியில் கூட்டம்
இதையடுத்து, முதல்வர் நடத்திய சமரச கூட்டத்திலும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், அதிருப்தியாளர்கள், மாநில காங்., மூத்த தலைவர்களுடன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் எம்.பி., ராகுல் ஆகியோர், டில்லியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்களை அனுசரித்து போகும்படி, தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், ஆளுங்கட்சியின் உட்கட்சி பூசலால், அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்பதால், அதிருப்தியை ஒதுக்கி வைத்து விட்டு, அனைவரும் தேர்தலுக்கு தயாராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* 25 தொகுதி இலக்கு
கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில், 20-19ல் நடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால், 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு உழையுங்கள் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, சட்டசபை தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட ஐந்து வாக்குறுதி திட்டங்களை குளறுபடி இன்றி அமல்படுத்தி, பயனாளிகளிடம் நேரில் சென்று விளக்க வேண்டும்.
ஒரு வேளை பா.ஜ.,வுடன் ம.ஜ.த., கூட்டணி அமைக்கும் பட்சத்தில், தேர்தல் திட்டத்தை மாற்றும்படி புதுடில்லி தலைவர்கள், கர்நாடகா தலைவர்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிய வந்துள்ளது.
முன்னதாக, முதல்வர் சித்தராமையா, தன் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் சொகுசு பஸ்சிலும்; துணை முதல்வர் சிவகுமார் தன் ஆதரவு தலைவர்களுடன் கார்களிலும் கூட்டம் நடந்த இடத்துக்கு வந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
…புல் அவுட்…
கார்கே, ராகுல் தலைமையில், 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்படுவர்.
– சித்தராமையா, முதல்வர்
…புல் அவுட்…
லோக்சபா தேர்தலில், ‘இந்தியா’ கூட்டணிக்கு கர்நாடகாவில் இருந்து 20 தொகுதிகளில் வெற்றி பெற்று கொடுப்பதாக உறுதி அளித்துள்ளோம். சட்டசபை தேர்தல் போன்று, அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக உழைப்போம்.
– சிவகுமார், துணை முதல்வர்
***
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்