இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் எல்.பி.எல் போட்டிகள் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த சர்வதேசளவில் பங்களிப்பை வழங்கி வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எல்.பி.எல் லீக்கின் முதல் கட்டமான கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் (02) நடைபெற்ற தம்புள்ளை ஆவுரா மற்றும் யாழ் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியை பார்வையிட வருகை தந்தபோதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ‘இந்தப் போட்டி மிகவும் நன்றாக இருக்கிறது, இது நான்காவது கட்டம். இந்த முறை நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இது முந்தைய போட்டிகளிலிருந்து தனித்து நிற்கிறது. மேலும், போட்டியின் தரம் மிகவும் சிறந்த மட்டத்தில் இருப்பதாக நான் கருதுகிறேன்,’ என்று கூறிய அமைச்சர், ‘இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு இந்த போட்டி ஒரு சிறந்த ஆதரவை வழங்குகிறது. மேலும் ‘சுற்றுலா இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பகுதியாகும், எனவே எல்.பி.எல் போட்டி நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குகிறது’ என்று அவர் கூறினார்.
தாம் சுற்றுலா அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு செல்லும் பின்னணி உருவாகியிருந்ததாகவும், ஆனால் தற்போது அந்த நிலை முற்றாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.