கூகுள் கொண்டாடும் ஆளுமை… யார் இந்த அல்டினா ஷினாசி? 

அல்டினா ஷினாசி (Altina Schinasi). இவருடைய 116-வது பிறந்தநாளுக்காக இன்று கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த அல்டினா ஷினாசி சிற்பி, ஓவியர், திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர், டிசைனர் என்ற பன்முகத் திறமைகளைக் கொண்டவர். பெண்கள் விரும்பி அணியும் கேட்-ஐ கண்ணாடியை வடிவமைத்தவர். இது தவிர ஏராளமான ஆவணப் படங்களையும், பல்வேறு கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியவர் அல்டினா. மேலும் புகழ்பெற்ற ஓவியர்களான சல்வடோர் டாலி மற்றும் ஜார்ஜ் க்ரோஸ் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர்.

பாரிஸில் ஓவியக் கலை பயின்ற அல்டினா, அமெரிக்காவுக்குத் திரும்பிய பிறகு, நியூயார்க்கில் உள்ள பல்வேறு ஸ்டோர்களில் ஜன்னல் அலங்காரம் செய்பவராக பணியாற்றினார். வேலையில் இருந்தபோது, ​​பெண்களின் கண்ணாடிகளுக்கு வட்ட வடிவில் மட்டுமே ஃபிரேம்கள் இருப்பதை அல்டினா கவனித்தார். இதன் விளைவாக கேட்-ஐ வடிவ ஃபிரேமை உருவாக்கினார். இது ஹார்லிகுயின் (Harlequin) ஃபிரேம்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

கேட்-ஐ வடிவ ஃபிரேம்களை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் நிராகரித்தபிறகு, ஒரு உள்ளூர் கடைக்காரர் அதை வாங்கி விற்பனை செய்தார். சில நாட்களிலேயே அவை நியூயார்க முழுவதும் பிரபலமடைந்தன. 1930களின் பிற்பகுதியிலும் 1940களிலும், இந்த ஃபிரேம்கள் அமெரிக்காவின் ஃபேஷன் அடையாளமாக மாறியது. பெண்கள் இன்றளவும் விரும்பி அணியக் கூடிய கண்ணாடி ஃபிரேம்களாக இது இருந்து வருகிறது.

அல்டினா தனது கண்டுபிடிப்புக்காக 1939ஆம் ஆண்டு லார்ட் & டெய்லர் அமெரிக்கன் டிசைன் விருது பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தனது ஆசியரான ஜார்ஜ் க்ரோஸைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தை தயாரித்தார். அந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. வெனிஸ் திரைப்பட விழாவில் முதல் இடத்தைப் பெற்றது. ‘தி ரோட் ஐ ஹேவ் டிராவல்ட்’ என்ற புத்தகத்தையும் அல்டினா எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் தனது கணவரும் ஓவியருமான செலஸ்டினோ மிராண்டா உடன் வாழ்ந்துவந்த அல்டினா ஷினாசி, 1999ஆம் ஆண்டு காலமானார். 2014ஆம் ஆண்டு அவரைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று வெளியானது. அவரது பிறந்தநாளான இன்று (ஆகஸ்ட் 04) கூகுள் நிறுவனம் அவருக்காக ஒரு சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.