சர்வதேச மாணவர்களுக்காக தனி இணையதளம் – மத்திய அரசு தொடங்கியது

புதுடெல்லி,

நாட்டில் உள்ள சர்வதேச மாணவர்களின் கல்வி தேடல்களை எளிதாக்கும் வகையில் ‘இந்தியாவில் படி’ என்ற பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் இந்த இணையதளத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த இணையதளம் குறித்து ஜெய்சங்கர் கூறுகையில், “பல்வேறு பின்னணியில் உள்ள மாணவர்களை வரவேற்பதன் மூலம் இந்தியாவை உலகளாவிய கல்வியின் மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது இந்த இணையதளம். இது, சர்வதேச மாணவர்களுக்கான பதிவு முதல் விசா அனுமதி வரை பயனர் நட்பு விண்ணப்ப செயல்முறைகளை செயல்படுத்தும். சர்வதேச மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து சலுகைகளைப் பெறுவதற்கும் இந்த இணையம் உதவும்” என்றார்.

தொடர்ந்து பேசிய மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், “தேசிய கல்வி கொள்கையால் வழிநடத்தப்படும் இந்த இணையதளம் இந்தியாவை விருப்பமான கல்வி இடமாக மாற்றுவதுடன், வளமான எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான கல்வி எல்லைகளை விரிவுப்படுத்தும் எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. உயர்கல்விக்கான விருப்பமான இடமாக இந்தியாவை மாற்றுவதில் இந்த இணையதளம் ஒரு முக்கிய படியாக இருக்கும்” என கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.