பிரிஸ்பேன்,
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தென்கொரியாவுக்கு எதிரான கடைசி லீக்கில் ‘டிரா’ கண்ட முன்னாள் சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் மூட்டையை கட்டியது.
உலகக் கோப்பை கால்பந்து
32 அணிகள் இடையிலான 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன.
‘எச்’ பிரிவில் நடந்த முக்கியமான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி, தென்கொரியாவை பிரிஸ்பேன் நகரில் சந்தித்தது. கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் புகுந்த ஜெர்மனிக்கு, தென்கொரியா வீராங்கனைகள் கடும் சவால் கொடுத்தனர். 6-வது நிமிடத்தில் கொரியாவின் கோ சோ ஹியுன் கோல் அடித்தார். 42-வது நிமிடத்தில் ஜெர்மனி கேப்டன் அலெக்சாண்ட்ரா போப் தலையால் முட்டி பதில் கோல் திருப்பினார். 58-வது நிமிடத்தில் அவர் மீண்டும் ஒரு கோல் போட்டார். ஆனால் அது ‘ஆப்-சைடு’ என்று மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்திற்கு உள்ளானார். தொடர்ந்து 59-வது நிமிடத்தில் அலெக்சாண்ட்ரா தலையால் முட்டித்தள்ளிய பந்து கம்பத்தில் பட்டு மயிரிழையில் நழுவியது.
வெற்றிக்குரிய கோலை அடிக்க ஜெர்மனி வீராங்கனைகள் கடைசி நிமிடம் வரை ஆக்ரோஷமாக விளையாடினர். பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் (71 சதவீதம்), ஷாட் அடிப்பதிலும் ஜெர்மனியே ஆதிக்கம் செலுத்திய போதிலும் தென்கொரியாவின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. குறிப்பாக அந்த அணியின் கோல் கீப்பர் கிம் ஜங் மி, ஜெர்மனியின் இரு கோல் வாய்ப்புகளை முறியடித்து அசத்தினார். பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இதே நேரத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அறிமுக அணியான மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. 45-வது நிமிடத்தில் மொராக்கோ கேப்டன் செபாக், பெனால்டி வாய்ப்பில் உதைத்த பந்தை கொலம்பியா கோல் கீப்பர் தடுத்து தள்ளினார். திரும்பி வந்த அந்த பந்தை மற்றொரு மொராக்கோ வீராங்கனை அலிசா லாமரி வலைக்குள் அனுப்பி கோலாக்கினார்.
ஜெர்மனி வெளியேற்றம்
‘எச்’ பிரிவில் லீக் சுற்று முடிவில் கொலம்பியா, மொராக்கோ தலா 6 புள்ளிகளுடன் டாப்-2 இடங்களை பிடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. ஜெர்மனி (ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 4 புள்ளி), தென்கொரியா (1 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.
2003, 2007-ம் ஆண்டு உலக சாம்பியனான ஜெர்மனி, தரவரிசையில் 2-வது இடம் வகிக்கிறது. பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது இதுவே முதல் நிகழ்வாகும். கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டிருந்த ஜெர்மனி ‘அவுட்’ ஆனதால் வீராங்கனைகள் சோகம் ததும்ப கண்ணீர் விட்டனர். அதே சமயம் இந்த உலகக் கோப்பையில் களம் இறங்கிய 8 அறிமுக அணிகளில் மொராக்கோ மட்டுமே 2-வது சுற்றுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை முதல் 2-வது சுற்று (நாக்-அவுட்) ஆட்டங்கள் நடக்கின்றன. நாளை நடக்கும் ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து- ஸ்பெயின், ஜப்பான்- நார்வே அணிகள் மோதுகின்றன.