வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில இணையதளம் தொடக்கம்

புதுடெல்லி: வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வந்து படிப்பதை எளிதாக்கும் வகையில் இணையதளம் ஒன்றை மத்திய அரசு நேற்று தொடங்கியது.

சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்திய பல்கலைக்கழங்களில் படிப்பதை எளிதாக்கும் வகையில் https://studyinindia.gov.in/ என்ற இணையதளத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

இந்தியாவை உலகளாவிய கல்வி மையமாக ஆக்கும் நோக்கத்துடன் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல பின்னணியைச் சேர்ந்த மாணவர்களை இந்தியாவில் படிக்கவைக்க முடியும். கல்வியில் இந்தியா சர்வதேச தடம் பதிக்கவும் இந்த நடவடிக்கை உதவும். இந்த இணையதளம் மூலம் வெளிநாட்டு மாணவர்கள், விசா அனுமதிக்கு எளிதாக விண்ணப்பிக்க முடியும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில், வெளிநாட்டு மாணவர்கள் விரும்பிய படிப்பை தேர்ந்தெடுக்கும் முறைகளை இந்த இணையதளம் எளிதாக்குகிறது.

வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் படிப்பதால் உள்நாட்டு மாணவர்களும் பயனடைவர். இது வெளிநாட்டு மாணவர்களுடனான தொடர்பை எளிதாக்கும். உலகளாவிய சூழலில் பணிபுரிய இந்திய மாணவர்களை தயார்படுத்தும்.

பிறநாட்டு மாணவர்கள் இந்தியாவில் படிப்பதன் மூலம், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் சிந்தனைகள் பற்றி பரஸ்பர புரிதல் ஏற்படும்.வெளிநாட்டு மாணவர்கள், இந்தியாவில் படித்துவிட்டு தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது, அவர்கள் இந்தியாவின் நல்லெண்ண தூதர்களாக மாறுவர்.

இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ‘‘இந்த இணையதளத்துக்கான தொலைநோக்குக்கு, புதிய தேசிய கல்வி கொள்கை காரணம். வளமான எதிர்காலத்தை உருவாக்க இந்தியாவை அனைவரும் தேர்வு செய்யும் கல்வி மையமாக மாற்றும் நமது உறுதியை இந்த இணையதளம் பிரதிபலிக்கிறது. இது, கல்வி அமைச்சகம் கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய முன்னணி திட்டம். இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில், பயில வெளிநாட்டு மாணவர்களை அழைப்பதன் மூலம், இத்திட்டம் வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தியாவை முக்கிய கல்வி மையமாக அங்கீகரிக்கச் செய்யும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.