பெங்களூரு, நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட, ‘சந்திரயான் – 3’ விண்கலம், இன்று நிலவின் சுற்று வட்டப் பாதையில் செலுத்தப்பட உள்ளதாக, ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, மூன்றாவது முயற்சியாக, கடந்த 14ம் தேதி, சந்திரயான் – 3 விண்கலத்தை, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோ ஏவியது.
புவி வட்டப்பாதை பயணத்தை வெற்றிகரமாக முடித்த சந்திரயான் – 3 விண்கலம், கடந்த 1ம் தேதி நிலவை நோக்கிய பயணத்தை துவங்கியது.
இந்நிலையில், இஸ்ரோ நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
நிலவுக்கான பயணத்தில், மூன்றில் இரண்டு பங்கு துாரத்தை, சந்திரயான் – 3 விண்கலம் கடந்துள்ளது.
திட்டத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, நிலவின் சுற்று வட்டப் பாதையில் இன்று இரவு 7:00 மணி அளவில், சந்திரயான் – 3 விண்கலம் செலுத்தப்பட உள்ளது.
நிலவுக்கு அருகில் விண்கலம் சுற்றி வரும் போது, இந்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
இதையடுத்து, வரும் 23ம் தேதி நிலவில் மென்மையாக தரையிறங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement