புதுச்சேரி: புதுச்சேரியில் 11வது சர்வதேச ஆவண குறும்பட திருவிழா இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
இதுகுறித்து, விழா ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ், மும்பை மத்திய திரைப்படப் பிரிவு, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகியவை இணைந்து 11-ஆவது சர்வதேச ஆவணப்பட குறும்படத் திருவிழாவை, புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் ஆடிட்டோரியத்தில் இன்று முதல் வரும் 6 ம்தேதி வரை மூன்று நாட்கள் நடத்துகிறது.
விழாவில், கான் திரைப்படவிழா, மும்பை திரைப்பட விழாக்களில் விருது பெற்ற சர்வதேச அளவில் சிறந்த படங்கள் திரையிடப்படவிருக்கின்றன. 9 நாடுகளைச் சேர்ந்த படங்களுடன் 32 படங்கள் திரையிடப்படவுள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளம் படைப்பாளிகளின் இலக்கிய படங்கள் இடம் பெறுகின்றன.
இதன் துவக்க விழா இன்று மாலை 5 மணிக்கு அலையன்ஸ் பிரான்சிஸ் ஆடிட்டோரியத்தில் நடக்கிறது. விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக பொது மேலாளர் ராமகிருஷ்ணன், அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநர் லொரன் ஜலிகு, எடிட்டர் லெனின், இயக்குநர் சிவக்குமார், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், நிர்வாகிகள் ராமச்சந்திரன், தமிழ்மணி, களப்பிரன், பேராசிரியர் இளங்கோ, திரைக்கலைஞர் ரோகிணி கலந்து கொள்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை புதுச்சேரி திரை இயக்க நிர்வாகிகள் ராமச்சந்திரன், உமா அமர்நாத், கலியமூர்த்தி, செல்வம், பச்சையம்மாள் ஆகியோர் செய்து வருகின்றனர் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement