இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அரசு முறை பயணமாக கடந்த மாதம் இந்தியா வந்தார். இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்த ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விமான சேவை உள்ளிட்ட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இருநாட்டு தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு விரைவில் பயணகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்றார். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். இந்நிலையில் வவுனியாவில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் காங்கேசன்துறை – காரைக்கால் இடையே கப்பல் சேவை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையே பயணப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகள் முனையம், சுங்க அலுவலகம் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றும் இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து பயணிகள் முனையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் 8 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை வடக்கு மாகாணத்திற்கான தொலை வெறும் 110 கிலோ மீட்டர்தான். நாகப்பட்டினத்தில் இருந்து கப்பலில் சென்றால் வெறும் 4 மணிநேரத்தில் காங்கேசன் துறையை சென்றடைந்துவிடலாம் என கூறப்படுகிறது. இதன்காரணமாக தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டம் கப்பல் போக்குவரத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தொலைவும் குறைவு, நேரமும் குறைவு என்பதால் இருநாடுகளுக்கும் இடையிலான தினசரி பயணிகள் போக்குவரத்து மற்றும் வர்த்தக போக்குவரத்து மேம்படும். ஏற்கனவே ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கப்பல் பயணம் தொடங்க உள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.