நாடு முழுவதும் 508 ரயில்வே நிலையங்கள் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளன. அதன்படி தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 18 ரயில் நிலையங்களில் இன்று அம்ரித் பாரத் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக விருதுநகர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 7.73 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் மோடி காணொளிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், விருதுநகர் தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர், தென்னக ரயில்வேதுறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து மாணிக்கம் தாகூர் எம்.பி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “விருதுநகர் ரயில் நிலையத்தில் 7 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துவிட்டு, கிட்டத்தட்ட 70 நிமிடங்கள் பேசியிருக்கிறார். அவரது பேச்சை இவ்வளவு நேரமும் பொறுமையாக கேட்ட மக்களுக்கு நன்றி. இந்த 7 கோடி ரூபாய் திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்கு 20 லட்சம் ரூபாய் செலவுசெய்து விழா நடத்தியிருக்கிறார்கள். பிரதமரின் செயல்படுகள் எல்லாம் இதுபோல அநியாய செலவு செய்யப்பட்டே விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த மார்கெட்டிங் டெக்னிக் எல்லாம் பிரதமர் மோடியையே சாரும்.

விருதுநகர் மாவட்டத்துக்கென மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எந்த திட்டமும் முழுதாக வரவில்லை. வெறும் அறிவிப்புகளோடும், விளம்பரங்களோடும் நிறுத்தப்படுகிறது. குறைந்தபட்சம் இந்த ரயில் நிலைய திட்டமாவது செயல்படுத்தப்படும் என நினைக்கிறேன். காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது. எனவே ராகுல் காந்திக்கு உடனடியாக எம்.பி பதவியை திரும்ப அளிக்கவேண்டும். எப்படி 24 மணி நேரத்திற்குள்ளாக ராகுல் காந்தியின் எம்.பி பதவி பிடுங்கப்பட்டதோ, அதேபோல உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின்னால், 24 மணி நேரத்திற்குள்ளாக எம்.பி பதவியை திருப்பி கொடுக்கவேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு இதை உடனே செயல்படுத்தாமல் காலந்தாழ்த்தி வருகிறது.

இந்நிலையில் வருகிற 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஒருவேளை ராகுல் காந்தி கலந்துகொண்டால் அதானி பிரச்னை, மணிப்பூர் கலவரம் உள்ளிட்டவை குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்புவார் என பயந்தே, அவருக்கு எம்.பி பதவி வழங்க விடாமல் சதி செய்கிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னாலும், ராகுல் காந்தியை எம்.பி-யாக அங்கீகரிக்காமல் காலதாமதம் செய்வது குறித்து அவையில் எடுத்துரைப்போம். ஆர்.எஸ்.எஸ்-காரர்களுடன் பழகி, பழகி வெறுப்பு அரசியல் என்றால் என்னவென்று வானதி சீனிவாசனுக்கு அர்த்தம் தெரியவில்லை. ராகுல் காந்தி அன்புக்கான அரசியல் செய்து வருகிறார். நாட்டு மக்களின் ஒற்றுமைக்கான அரசியல் செய்து வருகிறார். மத்திய அமைச்சர் அமித் ஷா, அனைவரும் இந்தி பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டுமக்களின்மீது இந்தியைத் திணிப்பதை எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளாது.
அண்ணாமலை பாதயாத்திரை செல்லவில்லை. அவர், பாதயாத்திரை என்ற பெயரில் கூடவே டிராமா கம்பெனியை அழைத்துச் செல்கிறார். ஒவ்வொரு ஊருக்கு அவர் செல்லும்போதும் அவருடனே அழைத்துச் செல்லப்படும் டிராமா கம்பெனிகள் அவருக்கு முன்னதாக வந்து ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாகத்தான் அந்த பாதயாத்திரை நடக்கிறது. அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பாதயாத்திரை தொடக்கவிழாவில் கலந்துகொண்ட பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் என மூத்த தலைவர்கள் யாரும் இப்போது அண்ணாமலையுடன் பாதயாத்திரையில் இல்லை. அதேசமயம், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் டாஸ்மாக் பதிலாக கள்ளுக்கடை திறப்போம் என்று கூறுவதும் சாத்தியம் இல்லை” என்றார்.