எலான் மஸ்க் – மார்க் சக்கர்பெர்க் இடையே நடக்கும் நிஜ சண்டை.. வெல்லப்போவது யார்?

நியூயார்க்:
ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரும் உலக அளவில் நம்பர் 1 பணக்காரருமான எலான் மஸ்க்குக்கும், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்குக்கும் இடையே நிஜமான சண்டை உறுதியாகியுள்ளது. இந்த சண்டை ட்விட்டரில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இன்றைய தேதிக்கு உலக அளவில் மிகப்பெரிய சமூக வலைதளங்களாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவையே விளங்குகின்றன. இவற்றில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தி நடத்தி வருகிறார். அதேபோல, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களை மார்க் ஜுக்கர்பெர்க் நிர்வகித்து வருகிறார். இந்த சூழலில், சமீபகாலமாக எலான் மஸ்க் – மார்க் ஜுக்கர்பெர்க் இடையே வார்த்தை மோதல் அடிக்கடி ஏற்பட்டு வந்தது.

அரசியல் விவகாரங்கள் தொடங்கி ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்த கலந்துரையாடல் வரை அவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சித்து வந்தனர். இந்த சூழலில், கடந்த மாதம் இதேபோல் இருவருக்கும் இடையே மோதல் வெடிக்க, தன்னுடன் நேருக்கு நேர் மோத தயாரா என மார்க் ஜுக்கர்பெர்கிடம் எலான் மஸ்க் சவால் விடுத்தார். இந்த சவாலை மார்க்கும் ஏற்றுக் கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக, இருவரும் தனித்தனி சண்டை பயிற்சியாளர்களிடம் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர். எலான் மஸ்க் தனது 14 வயது முதலாகவே கராத்தே, ஜி ஜுட்ஸு தற்காப்புக் கலைகளை பயின்று வருகிறார். அந்தக் கலைகளில் அவர் கறுப்புப் பட்டைகளையும் (பிளாக் பெல்ட்) அவர் பெற்றிருக்கிறார். அதே போல, மார்க் ஜுக்கர்பெர்க்கும் கடந்த சில ஆண்டுகளாக ஜி ஜுட்ஸு பயிற்சியை பெற்று வருகிறார்.

இந்த இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையானது, எம்எம்ஏ (MMA) சண்டையை போல இரும்பு கேஜுக்குள் வைத்து நடைபெறும். இந்த சண்டையில் எந்த விதிமுறைகளும் கிடையாது. அதாவது, எதிராளியின் முகத்திலும், உடலிலும் குத்தலாம்; உதைக்கலாம்; லாக் செய்யலாம். இந்த சண்டை இந்த மாத இறுதியில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தனக்கும், மார்க் ஜுக்கர்பெர்க்குக்கும் இடையேயான சண்டை ட்விட்டரில் நேரலை (லைவ்) செய்யப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார். எலான் மஸ்க் – மார்க் ஜுக்கர்பெர்க் இடையேயான சண்டையை உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.