கர்நாடகா டூ மேட்டூர் அணை… வந்ததே குட் நியூஸ்… ஆனாலும் காவிரி நீர்வரத்தில் ஒரு சிக்கல்!

மேட்டூர் அணையின் முக்கியத்துவத்தை பற்றி தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் காவிரி நீரை தேக்கி வைத்து, உரிய நேரத்தில் 12 மாவட்டங்களை சேர்ந்த 16.05 லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இதில் தண்ணீர் சேகரித்து வைப்பதற்கான அதிகபட்ச உயரம் 120 அடி.

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா வழிபாடு

மேட்டூர் அணை நீர்மட்டம்

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 6) காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58.19 அடியாக இருக்கிறது. நீரின் கொள்ளளவு 23,356 மில்லியன் கன அடி (மொத்த கொள்ளளவு 93,470 மில்லியன் கன அடி). இந்த அளவிற்கு நீர்மட்டம் சரிந்ததால் நூற்றாண்டு பழமை வாய்ந்த நந்தி சிலை முழுவதுமாக வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது. இதை கண்டு ரசிக்க விடுமுறை நாளில் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

குறுவை சாகுபடி

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருவதால் குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீரை திறக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கர்நாடகா மாநிலத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. டெல்லியிலும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர்

எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் குறுவை சாகுபடி, சம்பா நெல் விதைப்பு ஆகியவற்றுக்கு மேட்டூர் அணையில் இருந்து தான் தண்ணீர் திறக்கப்படும்.

காவிரி நீர்

இதற்கு கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரையே பெரிதும் நம்பியிருக்கிறோம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தேவையான நீரை கர்நாடகா அரசு வழங்கவில்லை. காவிரி நதிநீர் ஆணைய வழிகாட்டுதலையும் பின்பற்றவில்லை. ஜூன் 1 – 31 காலகட்டத்தில் 40.4 டி.எம்.சி தண்ணீர் வர வேண்டும். ஆனால் 11.6 டி.எம்.சி மட்டுமே கிடைத்தது. 28.8 டி.எம்.சி பற்றாக்குறையால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2ஆம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையில் 26.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது.

மு.க.ஸ்டாலின் கடிதம்

இது அடுத்த 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். எனவே விஷயத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு கர்நாடகா அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டிருந்தார். தற்போதைய சூழலில் கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகள் 80 சதவீத அளவிற்கு நிரம்பியுள்ளதாக தெரிகிறது. அப்படியிருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடாமல் இருந்தது. இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 10,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா தண்ணீர் திறப்பு

கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து 5,300 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 5,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்திருப்பதாக தெரிகிறது. இந்த தகவல் தமிழக விவசாயிகளுக்கு பெரிதும் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும் இது போதுமானதாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.