புதுடெல்லி: தமிழகத்தின் 18 ரயில் நிலையங்கள் உட்பட, நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் சீரமைக்கும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
ரயில்வே கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் சீரமைப்பதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இது ரயில்வே துறையில் நடைபெறும் மிகப் பெரிய அடிக்கல் நாட்டு விழா என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக 508 ரயில் நிலையங்களிலும் விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ரயில்வே செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றுகிறார்.
27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 508 ரயில் நிலையங்களில் சீரமைப்பு பணிகள் ரூ.24,470 கோடி மதிப்பில் 2 ஆண்டுகளில் முடிக்கப்படவுள்ளன. இந்த நிதியை மத்திய அரசு முழுமையாக அளிக்கிறது. உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55 ரயில் நிலையங்கள், பிஹாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்குவங்கத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலங்கானாவில் தலா 21, ஜார்க்கண்ட்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தலா 18, ஹரியாணாவில் 15, கர்நாடகாவில் 14 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளன. அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் 1,309 ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை கடந்தாண்டு ஒப்புதல் வழங்கியது. இதன் ஒரு பகுதியாக இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
இந்த சீரமைப்பு திட்டத்தில் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு நவீன வசதிகள் ஏற்படுத்தி தரப்படும், ரயில் நிலையங்களின் வடிவமைப்புகள் உள்ளூர் பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலைகளுடன் அமைக்கப்படும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மக்கள் விரும்பும் போக்குவரத்தாக ரயில்வே உள்ளதால், ரயில் நிலையங்களில் உலகத் தரத்திலான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். அதன்படி இந்த சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘ரயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு முக்கிய கவனம் செலுத்துகிறது. இதன் முன்னேற்றத்தை பிரதமர் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கிறார். ரயில் நிலையங்களின் வடிவமைப்பு குறித்து சிறப்பான ஆலோசனைகளை பிரதமர் வழங்கியுள்ளார். அவர் 508 ரயில் நிலையங்களின் சீரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்’’ என்றார்.