`என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மதுரை நகருக்குள் தனது பாதயாத்திரையின்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “அமித் ஷா சொன்னது என்னவென புரிந்து கொள்வதற்கு முதலமைச்சருக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரியாது. நம்முடைய தாய் மொழியில் எல்லா கல்வியும் மாற வேண்டும் என்பதில் அமித் ஷா உறுதியாக உள்ளார்.
ஐந்தாவது தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியவர் மோடி என்றால் பொருத்தமாக இருக்கும். தமிழ் மொழிக்கு பிரதமர் தொடர்ந்து உறுதுணையாக இருப்பார். ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் ஆக்கபூர்வமாக பேசத் தெரியாது. அவர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை.
பிரதமர் மோடி இந்தி தொன்மையான மொழி எனப் பேசியிருக்கிறார் என்றால் அதற்கான ஆதாரத்தை காட்டவும். திருக்குறளையும், ஆத்திச்சூடியையும், மேற்கோள்காட்டியும் உலகத்தின் தொன்மையான மொழி தமிழ் எனவும், பிரதமர் போகிற இடங்களில் எல்லாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.
தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தி.மு.க, பேனா சிலை வைக்கிறது. ஆனால், தமிழை வளர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை. எந்த நிதியும் ஒதுக்கவில்லை, கடந்த கல்வி ஆண்டில் 54 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். 1967-லிருந்து 5 முறை ஆட்சி செய்தவர்களின் தமிழ் வளர்க்கும் லட்சணம் இதுதான்!

இரண்டு ஆண்டுகளில் தி.மு.க அரசு ரூ.1.45 லட்சம் கோடி கூடுதலாக கடன் வாங்கி கொள்ளையடித்திருக்கிறது. நெஞ்சுவலி வந்து ஓர் அமைச்சர் புழல் சிறையில் தூங்குகிறார், எந்த வேலையும் செய்யாமல் அமைச்சருக்கான சம்பளம் வாங்குகிறார். ஊழல் செய்த அமைச்சருக்கு ஊதியம் கொடுக்கிறார் என்றால் முதலமைச்சரும் குற்றவாளிதான், அமைச்சரின் ஊழல் உறுதி செய்யப்படும்,. தி.மு.க அமைச்சர்களிடம் உள்ள ஊழல் பணத்தை வைத்து ஒரு நாளில் தமிழகத்தின் கடனைக் கட்டிவிடலாம்.
30 சதவிகித கமிஷன் கொடுத்தால்தான் தமிழகத்தில் புதிய தொழிற்சாலை தொடங்க முடியும் என்ற நிலை உள்ளது. அதனை சபரீசன், உதயநிதி, சண்முகராஜ் ஆகியோரிடம் கொடுக்க வேண்டும். அதனால், தொழில் நிறுவனங்கள் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்று விடுகின்றன.
நாம் டி.எம்.கே ஃபைல்ஸ் வெளியிட்டதால், சபரீசன் இங்கு இருப்பதில்லை, வந்துவிட்டு உடனே லண்டன் சென்று விடுகிறார். ஃபாக்ஸ்கான் தமிழகத்திற்கு வந்துவிட்டதாக முதலமைச்சர் ட்வீட் போட்டார். ஆனால், சில நாள்களிலயே ஃபாக்ஸான் கம்பெனி கர்நாடகாவிற்கு சென்றுவிட்டதால், ட்விட்டர் பதிவை டெலிட் செய்துவிட்டார். தமிழகத்தில் 52 லட்சம் கேஸ் மதுபானம் விற்பனையகிறது, இதில் 40 சதவிதம் கேஸ் விற்பனை ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலுவுடையதுதான்.
டாஸ்மாக்கில் வருவது இந்தியன் மேட் பாரின் எரி சாராயம்தான். அதனை குடித்தால் குடல் வெந்துவிடும். லாபத்திற்காக தி.மு.க-வினர் ஏதையோ செய்து விற்கிறார்கள். எரிசாராயம் குடித்தால் மரணம் நிச்சயம். குவாலிட்டி செக் இல்லாததால் தரமற்ற சாராயம் விற்கப்படுகிறது.

ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம் வருவது நல்லதுதான். அப்போதுதான் அவர் ஏதாவது சேட்டை செய்து பா.ஜ.க-வுக்கு மேலும் இடங்கள் அதிகரிக்க உதவி செய்வார். தேர்தலில் வாழ்வா சாவா பா.ஜ.க-வுக்கு அல்ல, தி.மு.க-வுக்குத்தான்.
இந்த தேர்தலில் தி.மு.க தோற்றால் தலைமையில் மாற்றம் வரும். நேர்மையாக உட்கட்சித் தேர்தலை நடத்தினால், கனிமொழிதான் தி.மு.க-வின் தலைவராவார். காரணம், குடும்ப ஆட்சி வேண்டாம் என்று தி.மு.க-வினரே சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
செல்லூர் ராஜூவைப் பொறுத்தவரை, அவர் குறித்து நான் சொன்ன கருத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ளப்போவதில்லை. பத்தாயிரம் முறை கேட்டாலும் ஒரே பதில்தான். செல்லூர் ராஜூ குறித்துப் பேசி என்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ளப்போவதில்லை” என்றார்.