இன்று நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு , ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவிகளுக்கு பட்டமும், பதக்கமும் வழங்கி கவுரவித்த பின் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “ சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. பாலின சமத்துவத்தின் அடையாளமாக சென்னைப் பல்கலைக்கழகம் திகழ்கிறது. சென்னைப் பல்கலைக்கழகம் கல்வியை மேம்படுத்துவதில், இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறது.

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்களான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, கே.ஆர்.நாராயணன், ஆர்.வெங்கட்ராமன் மற்றும் ஏபிஜே அப்துல்கலாம் போன்ற ஆறு பேரும் இந்த பாரம்பரியமிக்க பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்தான் . இத்தகைய தலைவர்களை எல்லாம் உருவாக்கிய இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றுள்ள நீங்கள் அதற்காக பெருமிதம் கொள்ள வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என் ரவி வரவேற்புரையை தமிழில் பேசியிருக்கிறார். ஆளுநர் தமிழில் பேசியதை பார்த்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆர்வமுடன் ரசித்திருக்கிறார். உலக பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா திகழ்கிறது. மாணவர்களின் கனவு பெரியதாக இருக்க வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியா மறுமலர்ச்சி அடையும் தருணத்தில் நீங்கள் பட்டம் பெறுவது உங்கள் அதிர்ஷ்டம். வாழ்க தமிழ், வாழ்க பாரதம் எனக்கூறி தனது உரையை கவர்னர் நிறைவு செய்திருக்கிறார்.

பின்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ சிறந்து விளங்கும் பல்கலைக்கழகம் என்ற அடைமொழியை சென்னை பல்கலைக்கழகத்திற்கு யுஜிசி வழங்கியுள்ளது. நோபல் பரிசு பெற்ற சர் சிவி ராமன் படித்த பல்கலைக்கழகம் இது.மிகப்பெரும் அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி உள்பட பல சிறந்த ஆளுமைகளை வழங்கிய பெருமை இந்த பல்கலைக்கழகத்திற்கு உண்டு.

உங்கள் முன் உரையாற்றும் நானும் இதே பல்கலைக்கழகத்தில் படித்தவன் தான். அந்த வகையில் உங்கள் சீனியராக இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டுள்ளேன். மாணவர்கள் தகுதியான வேலை கிடைத்தப் பிறகும் படிப்பதை நிறுத்தி விடக்கூடாது. யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பது கல்வி அறிவு தான்” என்றார்.