"முஸ்லிம்கள் சாத்தானின் பிள்ளைகள் அல்ல; பாரத தாயின் பிள்ளைகள்".. சொல்வது அர்ஜுன் சம்பத்!

சென்னை:
“முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் அல்ல.. அவர்கள் பாரதத் தாயின் பிள்ளைகள்” என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மணிப்பூரில் நடந்த கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் அண்மையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சாத்தானின் பிள்ளைகள்” என்று கூறினார். சீமானின் இந்த பேச்சு தமிழகத்தில் பெரும் சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் சீமான்.

அந்த செய்தியாளர் சந்திப்பிலும், “கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மையினர் கிடையாது. அவர்களை யாராவது இனி சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன்” எனக் கூறி மேலும் சர்ச்சையை கிளப்பினார் சீமான். சீமானின் இந்தப் பேச்சுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் மத்தியிலும் சீமான் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களுக்கும் பொதுவான நாடு நமது பாரத நாடு. இந்த நாட்டில் செங்கோல் இருக்கின்ற வரை, சனாதன தர்மம் இருக்கிற வரை யாருக்கும் அநீதி இழைக்கப்படாது. அதனால் தான், இன்றைக்கு நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தின் சின்னமான செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. உலகில் உள்ள பல முஸ்லிம் நாடுகளில் ஒருசில முஸ்லிம்களே துன்புறுத்தப்படுகிறார்கள். ரோஹிங்கயா அகதிகள் போல விரட்டியடிக்கப்படுகிறார்கள்.

பல முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களுக்கே பாதுகாப்பு இல்லை. உலகிலேயே அதிக அளவிலான முஸ்லிம்களை கொண்டிருக்கும் நாடு நமது பாரத நாடு. இங்கு முஸ்லிம் மக்கள் அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் அல்ல. நமது பாரதத் தாயின் பிள்ளைகள். எல்லோரும் செங்கோலை ஏற்றுக்கொண்டவர்கள். அதனால் இங்கு யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் கிடையாது. எல்லோரும் இங்கு சமம். எனவே, அனைவருக்கும் பொதுவான பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என நாங்கள் வலிறுத்துகிறோம்.

மணிப்பூரில் நடக்கும் கலவரம் புதிதாக நடப்பது அல்ல. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதே பல வன்முறைகள் அங்கு நடந்தன. பெண்கள் நிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள். அது ஐரோப்பிய கிறிஸ்தவ பாணி போராட்டம். பெண்கள் நிர்வாணப் போராட்டம் நடத்துவது என்பது ஐரோப்பிய கிறிஸ்தவ பாணி போராட்டம். அந்தப் போராட்டத்தை குக்கி இன மக்கள் முன்னெடுக்கிறார்கள். குக்கி இன மக்கள் இந்தியர்கள் அல்ல. அவர்கள் முழுக்க கிறிஸ்தவர்கள். அவர்கள் பர்மாவில் இருந்து இங்கு வந்தவர்கள். தமிழர்களை தாக்கியவர்கள் அவர்கள். இவ்வாறு அர்ஜுன் சம்பத் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.