புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் 3-வது ஆலோசனைக் கூட்டம் வரும் 31-ம் தேதி மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன.
இது தொடர்பான எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ம்தேதி நடைபெற்றது. இதில், வரும் மக்களவைத் தேர்தலுக்காக பாஜகவுக்கு எதிராக இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. அடுத்தபடியாக ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியன் நேஷனல் டெவலப் மென்ட்டல் இன்க்ளூசிவ் அலயன்ஸ் (இண்டியா) என பெயர் சூட்டப்பட்டது.
இந்நிலையில், இண்டியா கூட்டணியின் 3-வது ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என இக்கூட்டணியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.
இக்கூட்டத்துக்கு முன்னதாக, 11 பெரிய கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இவர்கள் கூட்டணியை வழிநடத்துவார்கள் எனத் தெரிகிறது. தேர்தலுக்கு முன்பாக மேலும் 3 கூட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்புக் குழு மட்டுமல்லாது, தேர்தல் பிரச்சாரக் குழு மற்றும் பல்வேறு விவகாரங்களை கவனிப்பதற்காக 3 அல்லது 4 சிறிய அளவிலான குழுக்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். அப்போது வேலையின்மை, விலைவாசி உயர்வு, அரசியல் சாசனம் மீதான தாக்குதல், புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.