புதுடெல்லி: ‘இண்டியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் கூட்டணியின் தலைவராக சோனியா காந்தியும் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் முயற்சி மேற்கொண்டார். பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்த அவர், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் பயனாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸின் சரத் பவார் அணி, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி, தேசிய மாநாடு, ஜேகேபிடிபி, ஆர்எஸ்பி, ஐயுஎம்எல், கேரள காங்கிரஸ் (எம்), சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடது முன்னணி ஆகியவை ஓரணியில் திரண்டுள்ளன.
எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 17, 18-ம் தேதி கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 2-வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியன் நேஷனல் டெவலப்மென்ட்டல் இன்க்ளூசிவ் அலயன்ஸ் (இண்டியா) என்று பெயர் சூட்டப்பட்டது.
‘இண்டியா’ கூட்டணியின் 3-வது ஆலோசனைக் கூட்டத்தை மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணியின் நிர்வாகிகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.
இதன்படி ‘இண்டியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் கூட்டணியின் தலைவராக சோனியா காந்தியும் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 11 பிரதிநிதிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவை நியமிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறும்போது, “ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்தார். ‘இண்டியா’ கூட்டணிக்கும் அவர் தலைமை வகிப்பார் அல்லது அவர் பரிந்துரைக்கும் நபர் கூட்டணியின் தலைவராக பொறுப்பேற்பார்” என்று தெரிவித்தன.