ராகுல் காந்தியின் அடுத்த டார்கெட்… காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கொடுத்த முக்கிய அப்டேட்!

ராகுல் காந்தி மீண்டும் எம்.பி ஆகிவிட்டார். இவரது தகுதிநீக்க உத்தரவை மக்களவை செயலகம் இன்று காலை திரும்பப் பெற்றுக் கொண்டது. இதன்மூலம் நடப்பு கூட்டத்தொடரிலேயே அவர் பங்கேற்கலாம். அடுத்த ஓராண்டில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் ராகுல் காந்தி விஷயத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

அதிகார துஷ்பிரயோகம் – செல்வப்பெருந்தகை பேட்டி

கட்சியினர் கொண்டாட்டம்

இதை காங்கிரஸ் கட்சியினர் பெரிதும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏவும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான கு.செல்வப்பெருந்தகை அவர்களிடம் சமயம் தமிழ் சார்பில் பேசினோம். அதற்கு அவர், உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று.

செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ பிரத்யேக தகவல்

இந்திய அரசியல் சட்டம் பாதுகாக்கப் பட்டிருக்கிறது. நம்முடைய நாட்டில் வாழ்கிற மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை யாரும் சிதைக்க முடியாது. ஒருவேளை தற்காலிகமாக ஏதேனும் நடந்தாலும் உச்ச நீதிமன்றம் இருக்கிறது என்ற நம்பிக்கை மீண்டும் விதைக்கப்பட்டுள்ளது.

வயநாடு தொகுதி எம்.பி

இதன்மூலம் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மக்கள் நலப் பணிகளில் ஈடுபடுவார். நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக பிரதிபலிப்பார். வயநாடு மட்டுமின்றி, நாட்டிலுள்ள அனைத்து தொகுதிகளிலும் எங்கு பிரச்சினை நடந்தாலும் அதை நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கும் வகையில் வருங்கால பிரதமராக எங்கள் தலைவர் இருக்கிறார்.

உச்ச நீதிமன்றம் மீண்டும் குட்டு

ஒருவேளை தகுதி நீக்கத்தை திரும்ப பெற மாட்டேன். நாடாளுமன்றத்தில் அனுமதிக்க மாட்டேன் என்று மக்களவை செயலாளர் கூறியிருந்தால், உச்ச நீதிமன்றம் இன்னொரு குட்டு வைத்திருக்கும். இனிமேலும் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டு தான், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை திரும்ப பெற்றுக் கொண்டனர்.

காங்கிரஸ் ஆட்சி மலரும்

இனி அவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவார். இந்தியா கூட்டணிக்கு கிடைத்த முதல் வெற்றி தான் இது. நமது மக்கள் இந்தியா கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பார்கள். ஆட்சி மாற்றம் வரும். மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை அகற்றி நல்ல நிலைமைக்கு அவர்களை கொண்டு செல்வோம் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.