
விஜய்சேதுபதி படம் நடக்க இனி வாய்ப்பே இல்லை : சேரன்
நடிகர் விஜய்சேதுபதியை பொறுத்தவரை பிரபல ஹீரோக்களின் படங்களில் தமிழையும் தாண்டி மற்ற மொழிகளிலும் கூட வில்லனாக நடித்து வந்தாலும் இங்கே சில இயக்குனர்களை மீண்டும் கைதூக்கி விடும் விதமாக நட்புக்காக சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தும் வருகிறார். அப்படி ஒப்புக்காக நடித்த பல படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அந்தவிதமாக இயக்குனர் சேரனின் டைரக்ஷனில் ஒரு படத்தில் நடிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார் விஜய்சேதுபதி.
அந்த சமயத்தில் சேரன் இயக்கி வந்த திருமணம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது கூட விஜய் சேதுபதி அதை உறுதி செய்தார். அதன்பிறகு விஜய்சேதுபதியின் 96 பட வெற்றி விழாவில் சேரனும் கலந்து கொண்டார். 2018ல் இந்த அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது ஐந்து வருடம் ஆகியும் அந்த படம் பற்றிய பேச்சே இல்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த இயக்குனர் சேரனிடம் விஜய்சேதுபதி படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, “அந்த படம் நடக்க இனி வாய்ப்பே இல்லை.. விஜய்சேதுபதி இப்போது இன்னும் பல மடங்கு உயரங்களுக்கு போய்விட்டார். அவரது கால்சீட் கிடைக்கவே 10 வருடம் ஆகும்” என்று தனது விரக்தியை வழக்கமான புன்சிரிப்புடன் வெளிப்படுத்திவிட்டு கிளம்பினார் சேரன்.