இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க போலீசார் அனுமதி மறுப்பதாக அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான், 70. கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது.
பதவியில் இருந்த போது வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்டோர் பரிசுகளாக வழங்கிய பொருட்களை தோஷகானா எனப்படும் அந்நாட்டு கருவூலத்தில் ஒப்படைக்க தவறியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாதில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இதையடுத்து லாகூரில் வீட்டில் இருந்த இம்ரான் கான் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரை சந்திக்க போலீசார் அனுமதி மறுப்பதாக இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ‘சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரானை சந்திக்க பஞ்சாப் மாகாண உள்துறை செயலரிடம் முறையாக விண்ணப்பித்தோம். இருப்பினும், அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. கட்சித் தலைவரிடம் சட்ட ஆவணங்களில் கையொப்பம் வாங்குவதற்காக சட்ட வல்லுநர்கள் முறையிட்ட போதும் சிறை அதிகாரிகள் அனுமதி தர மறுக்கின்றனர்’ என அவர்கள் கூறினர்.
இதற்கிடையே இம்ரான் இல்லாத நிலையில் அக்கட்சியை வழிநடத்தும் ஷா மஹ்மூத் குரேஷி, ”அமைதியான போராட்டம் எங்கள் உரிமை. எந்த அரசு சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தக் கூடாது. யாரும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்’ எ, தொண்டர்களை எச்சரித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement