இணக்க அரசியல் என்பது பிரச்சினைகளை இலகுவாக தீர்ப்பதற்கான பொறிமுறையாக இருக்க வேண்டும் – தொல்லியல் திணைக்களம் குறித்து அமைச்சர் டக்ளஸ்

தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் அடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரியிற நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுவதாக அமையக் கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (07.08.2023) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே கடற்றொழில் அமைச்சர், தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

சுழிபுரம், பறாளை முருகன் ஆலயம் உட்பட யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 3 தொல்லியல் திணைக்களத்திற்கு உரிய பகுதியாக அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதிகளை தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தும் செயற்பாடானது உரிய வழிமுறைகளை பின்பற்றப்படாமல் மேற்கொள்ளப்பட்டிருப்பதை தன்னால் அறிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில், அனைத்து மக்களும் கௌரமான உரிமைகளை பெற்று வாழும் சூழலை உறுதிப்படுத்துவதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், குறுகிய நலன்களுக்காக சிலரினால் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாறான விடயங்கள் வேதனைக்குரியவை என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

தேசிய நல்லிணக்கத்தினை அடிப்படையாகக் கொண்ட இணக்க அரசியல் என்பது, இருப்பவற்றை பாதுகாத்து முன்னோக்கி நகர்வதாகவும் பிரச்சினைகளை இலகுவாக தீர்ப்பதற்கான பொறிமுறையாகவும் இருக்க முடியுமே தவிர, தவறான நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதாக இருக்க முடியாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை அமைச்சரவை ஏற்றுக்கொண்ட நிலையில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, குறித்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அமைச்சரவைகளில் கலந்துரையாடி சரியான தீர்மானங்களை மேற்கொள்வதன் ஊடாக தவறுகள் இடம்பெற்றிருப்பின் திருத்திக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.