நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான மக்களவை விவாதத்தில் நடந்த சில `தரமான’ சம்பவங்கள்!

நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்து ராகுல் காந்தி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. விவாதத்தை ராகுல் காந்திதான் தொடங்கிவைப்பதாக இருந்தது. ஆனால், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்.பி-யான கௌரவ் கோகோய் தான் விவாதத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார்.

ராகுல் காந்தி

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்ற முதல் நாளன்று, அவையில் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ இல்லை. அதனால், ராகுல் காந்தி பேசும் நேரத்தை காங்கிரஸ் கட்சி மாற்றியது. ராகுல் காந்தி பேசாமல் கௌரவ் கோகோய் பேசியதால், ‘இன்று ராகுல் காந்தி தயாராக இல்லைபோல. அல்லது, அவர் இன்று தாமதமாக எழுந்திருந்திருக்கலாம்’ என்று கிண்டலாகக் கூறினார் பா.ஜ.க எம்.பி-யான நிஷிகாந்த் துபே.

இரண்டாம் நாள் விவாதத்தின்போது ராகுல் காந்தி பேசினார். அப்போது, “மணிப்பூரை இந்திய நாட்டின் ஒரு பகுதி என்று பிரதமர் மோடி கருதவில்லை. மணிப்பூரில் நடந்த கொடூரங்கள் பாரத மாதாவையே கொன்றதற்கு சமம். நீங்கள் (மோடி) தேச பக்தர் கிடையாது. தேசத்துரோகி” என்றார் ராகுல் காந்தி. அதற்கு, அமைச்சர்களும் பாஜக எம்.பி-க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

ஸ்மிருதி இரானி – ராகுல் காந்தி

பிரதமர் மோடியையும், மத்திய அரசையும், பா.ஜ.க-வையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். அதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்தார். அப்போது, “மணிப்பூர் விவகாரம் குறித்து பேசுவதற்குத் தயார் என்று நாங்கள் தொடர்ந்து கூறினோம். அதிலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணி, பிரச்னையைத் திசைதிருப்புகிறது. பாரத மாதாவை நாங்கள் போற்றுகிறோம். சிலர் தங்களின் சுயலாபத்துக்காக உதட்டளவில் பாரத மாதா பெயரை உச்சரிக்கிறார்கள்” என்றார்.

நாடாளுமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் சன்சாத் தொலைக்காட்சியில், எதிர்க் கட்சியினரின் பேச்சை சரியாக ஒளிபரப்பவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். ராகுல் காந்தி பேசியபோது, அடிக்கடி சபாநாயகர் பக்கமே கேமரா திருப்பப்பட்டது என்றும், ராகுல் காந்தி பேசியதையோ, அவரது பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மேசையைத் தட்டியதையோ சன்சாத் தொலைக்காட்சியில் சரியாகக் காண்பிக்கவில்லை என்றனர் எதிர்க்கட்சியினர்.

மக்களவை

மக்களவையில் பேசிவிட்டு ராகுல் காந்தி புறப்பட்டார். அப்போது, பா.ஜ.க எம்.பி-க்களை நோக்கி அவர் ‘ஃப்ளையிங் கிஸ்’ கொடுத்தார் என்ற பிரச்னையை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுப்பினார். பெண் எம்.பி-க்கள் இருக்கும் சபையில் ‘ஃப்ளையிங் கிஸ்’ கொடுத்தது முறையற்ற செயல் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பா.ஜ.க பெண் எம்.பி-க்கள் புகார் அளித்தனர்.

பா.ஜ.க பெண் எம்.பி-க்களுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கீதா கோடா என்ற எம்.பி பதிலடி கொடுத்தார். “ராகுல் காந்தி பெண்களை மதிப்பவர். ஆனால், அவரை நாடாளுமன்றத்தில் பார்க்கக்கூடாது என்று பா.ஜ.க நினைக்கிறது” என்றார் கீதா கோடா.

அமித் ஷா

விவாதத்தில் கலந்துகொண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். கையில் குறிப்புகளை வைத்து நீண்ட நேரம் அவர் பேசினார். அப்போது, ‘அரசியல் நோக்கத்துக்காக இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். மணிப்பூரில் நடைபெற்ற இன மோதல் வெட்ககரமானது. அதைவிட வெட்ககரமானது, அதை வைத்து எதிர்க்கட்சிகள் செய்யும் அரசியல்’ என்றார் அமித் ஷா.

விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி, ‘மணிப்பூர் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது. அங்கு, ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இத்தனை அராஜகங்கள் அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கின்றன” என்றார்.

கனிமொழி

மேலும், ‘நீங்கள் (மோடி) நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியிருக்கிறீர்கள். அது சோழர் பரம்பரையிலிருந்து வந்ததாகச் சொல்கிறீர்கள். பாண்டியன் செங்கோல் பற்றி உங்களுக்குத் தெரியுமா? மக்களுக்கு சரியாக நீதி வழங்காததால் பாண்டியனின் செங்கோல் சுக்குநூறாகத் தகர்ந்தது. கண்ணகி கதையைப் படித்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தியை எங்கள் மீது திணிப்பதை விட்டுவிட்டு, போய் சிலப்பதிகாரம்’ படியுங்கள் என்று ஆவேசமாகப் பேசினார் கனிமொழி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.