சென்னை: செந்தில் பாலாஜியின் அமலாக்கத் துறை காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார். அவரிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் உள்ளிட்ட விசாரணை அறிக்கை விரைவில் டெல்லி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகிறது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பைபாஸ் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை அமலாக்கத் துறை ஆக.12-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
5 நாட்களில் 300 கேள்விகள்: இதையடுத்து, அவரை சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து கடந்த 7-ம் தேதி இரவு முதல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத் துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை காண்பித்து, அதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு, அவர் அளிக்கும் வாக்குமூலத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த5 நாட்களில் அவரிடம் 300-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் அளித்த அவகாசம் இன்றுடன் (12-ம் தேதி) முடிகிறது. விசாரணை முடிந்து அவர் இன்று மாலை மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுவார்.
இதைத் தொடர்ந்து, அவரது வாக்குமூலம் உள்ளிட்ட முழு விசாரணை அறிக்கையை, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளனர். அதை ஆய்வு செய்து, அவர் அளித்துள்ள பதில்கள் திருப்திகரமாகவும், நம்பகத்தன்மையுடனும் இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்வார்கள். கூடுதல் விவரம் தேவை என்று கருதும்பட்சத்தில், மீண்டும் அவரை காவலில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.