திருப்பதி: ஆந்திராவில் தக்காளி நேற்று கிலோ ரூ.44-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தக்காளியின் விலை கடந்தமாதம் கிலோ ரூ.250 வரை விற்கப்பட்டது. மழை, வெள்ளம் காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால், திடீரென தக்காளியின் விலை தாறுமாறாக ஏறியது. தங்கத்தின் விலைபோல் தினமும் ஒரு விலை விற்கப்பட்டது. எப்போதும் இல்லா வகையில் கிலோ ரூ.250 வரை விற்கப்பட்டது. இதனால் சில மாநிலங்களில் அரசே தக்காளியை அதிக விலைக்கு கொள்முதல் செய்து, அதனை மானிய விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய தொடங்கின.
இது ஒருபுறம் இருக்க, தொடர் மழையில் தக்காளி அறுவடை செய்த சில விவசாயிகள் இந்த சீசனில் கோட்டீஸ்வரர்களாகவும் ஆகிவிட்டனர். ஆந்திராவை சேர்ந்த சில விவசாயிகள், வெறும் ஒன்றறை மாதத்தில் தக்காளியை அறுவடை செய்து, ரூ.4 கோடி வரை சம்பாதித்துள்ளனர்.
இதனால், தக்காளி விலை எப்போது குறையும் என மக்கள்பெரிதும் எதிர்பார்க்க தொடங்கினர். தற்போது தக்காளியின் வரத்து வழக்கம் போல் அதிகரித்ததால், இதன் விலையும் குறைய தொடங்கி உள்ளது. நேற்று காலை ஆந்திர மாநிலம், மதனபல்லி தக்காளி மொத்த சந்தையில், ஏ கிரேட் தக்காளி கிலோ ரூ.44 முதல், ரூ.60 வரையிலும், பி கிரேட் தக்காளி ரூ.ரூ.36 முதல் ரு. 48 வரையிலும் விற்கப்பட்டது.
சராசரியாக தக்காளி விலை நேற்று ஒரு கிலோ மொத்த சந்தையில் ரூ.44 க்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.