நாங்குநேரி சம்பவம் | என்கேசி ஆணைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ரவிக்குமார் எம்பி கோரிக்கை

சென்னை: பள்ளிகளில் சாதிய, பாலின பாகுபாடுகள் நடக்காமல் இருக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் national knowledge Commission (NKC) அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என ரவிக்குமார் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்குநேரியில் வெட்டப்பட்ட மாணவரின் கல்விப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார். அவருக்கு நன்றி.

அந்த மாணவருக்கு உதவுவதால் இந்தப் பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது. பள்ளிகளில் சாதிய, பாலின பாகுபாடுகள் நடக்காமல் தடுக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் national knowledge Commission (NKC) அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.” என்று கூறியுள்ளார்.

மேலும், பள்ளிகளில் சாதிய பாகுபாடுகளைக் களைய வலியுறுத்தி கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எழுதிய கடிதத்தையும் இதனுடன் இணைத்துள்ளார்.

நாங்குநேரி சம்பவம் தொடர்பாக பேசியுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள்; வேற்றுமை உணர்வு வேண்டாம்” என வீடியோ மூலமாக மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விவரம்: “மாணவர்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க ஆசைப்படவில்லை” – நாங்குநேரி சம்பவத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் கருத்து

முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 17 வயது மாணவர், அவரது 14 வயது தங்கையை 3 பேர் கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அண்ணனையும், தங்கையையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதியப் பின்னணி கொண்ட இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.