சென்னை:
நெல்லையில் சாதிய வன்மத்தால் பள்ளி மாணவனும், அவனது தங்கையும் வெட்டப்பட்ட கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் இதுகுறித்து மிகுந்த ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை (17). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சின்னதுரையை வேறு சாதி மாணவர்கள் அவரை அதட்டியும், வேலை வாங்கியும் வந்துள்ளனர்.
குறிப்பாக, தங்கள் புத்தகப் பைகளை சுமக்க வைப்பது, சாப்பிட்ட பாத்திரங்களை கழுவச் செய்வது, தின்பண்டங்கள் வாங்கி வர சொல்வது என வேலை வாங்கி வந்துள்ளனர். இதனால் ஒருகட்டத்தில் வெறுத்து போன மாணவன் சின்னதுரை, இதுகுறித்து தனது தாயாரிடம் கூற, அவர் ஆசிரியரிடம் புகார் செய்துள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை ஆசிரியர் அழைத்து கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சின்னதுரையை நேற்று இரவு வீடு புகுந்து சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது தடுக்க வந்த அவரது தாத்தாவை அவர்கள் தள்ளிவிட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் சின்னதுரையின் தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாதிய வன்மத்தால் நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவம் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் மிகுந்த ஆதங்கத்துடனும், கோபத்துடனும் ட்வீட் போட்டுள்ளார். அதில், “தம்பி சின்னதுரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என அவர் கூறியுள்ளார்.