திருப்பதி: திருப்பதியில் இருந்து செகந்திராபாத் செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவர் டிக்கெட் எடுக்காமல், வேகவேகமாக ரயிலில் உள்ள கழிவறைக்குச் சென்று தாளிட்டு ஒளிந்துக்கொண்டார்.
செகந்திராபாத் செல்ல 8 மணி நேரம் ஆகும். இந்நிலையில், கழிவறையில் மறைந்திருந்தவர் தன்னிடமிருந்த சிகரெட்டை பற்ற வைத்தார். உடனே அவர் பயணித்த பெட்டியில் அபாய ஒலி அடிக்க ஆரம்பித்து விட்டது.
தீயை அணைக்கும் தானியங்கி கருவியும் தானாகவே தண்ணீரை அந்த பெட்டியில் தெளிக்க ஆரம்பித்து விட்டது. இதனால் பயணிகள் பயந்து விட்டனர். இது குறித்து, ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த ரயில் மனுபுலு எனும் இடத்தில் நிற்க வைக்கப்பட்டது.
அதன் பின்னர், ரயில்வே போலீஸாரும் குறிப்பிட்ட பெட்டியில் சோதனையிட்டனர். கழிவறையில் இருந்து புகை வந்ததால், அந்த கழிவறையின் கதவை தட்டினர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனால், போலீஸார் கதவை உடைத்தனர். அப்போதுதான் கழிவறையில் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக ரயிலில் ஏறியது தெரியவந்தது.
நெல்லூர் ரயில் நிலையம் வந்ததும், அந்தப் பயணியை கீழே இறக்கிய ரயில்வே போலீஸார், அவருக்கு அபராதம் விதித்தனர்.