‘சிக்ஸர்’கள் விளாசினோம்
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்காக, எதிர்க்கட்சியினர் நன்றாக, ‘பீல்டிங்’ அமைத்து இருந்தாலும், பா.ஜ., மற்றும் தே.ஜ., கூட்டணி உறுப்பினர்கள், ‘பவுண்டரி’களும், ‘சிக்ஸர்’களும் அடித்து தள்ளினர். ‘நோ கான்பிடன்ஸ்’ என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் போட்ட, ‘நோ பால்’களில், ஆளுங்கட்சியினர், ‘செஞ்சுரி’ அடித்துள்ளனர். என் சகாக்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். சபைக்கு வருவதற்கு முன் கடின உழைப்பை போட்டு, நீங்கள் ஏன் நன்றாக தயார் செய்துவிட்டு வந்திருக்க கூடாது? நீங்கள் தயார் செய்ய தான் நான் ஐந்து ஆண்டுகள் அவகாசம் அளித்தேனே?கடந்த 2018ல் நீங்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போதே, நீங்கள் திரும்ப வரவேண்டும் என, கேட்டுக் கொண்டேன். அதற்கு உங்களுக்கு ஐந்தாண்டுகள் ஆகியிருக்கிறது. எதிர்க்கட்சிகளை இந்த நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது; நீங்கள் பேசுவதை எல்லாம் மக்கள் கேட்டபடி இருக்கின்றனர். ஆனால் நீங்களோ ஏமாற்றத்தை தவிர மக்களுக்கு எதையும் உருப்படியாக கொடுக்கவில்லை.மக்கள் இப்போதும் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கடந்த கால சாதனைகளை முறியடித்து, 2024ல் தே.ஜ., கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதை என்னால் காண முடிகிறது.நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் துவங்கி மூன்று நாட்களில் பல விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடந்தன. ஆனால் முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட மற்ற நாட்களில் எதிர்க்கட்சிகள் சபையை செயல்பட அனுமதிக்கவில்லை. இந்த மசோதாக்கள் கிராம மக்கள், ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களின் நலன் மற்றும் எதிர்காலத்தைப் பற்றியது. அவர்களை பற்றி நீங்கள் கவலைப்படவில்லை. உங்களின் முதன்மை நோக்கம் அரசியல் செய்வதிலேயே உள்ளது.மக்கள் உங்களை எதற்காக தேர்ந்தெடுத்து பார்லிமென்டுக்கு அனுப்பி வைத்தனரோ, அந்த வேலையை செய்யாமல், அவர்களின் நம்பிக்கையை நீங்கள் தகர்த்து விட்டீர்கள்.எதிர்க்கட்சிகளுக்கு நாட்டை விட கட்சி தான் முக்கியம் என்பதை, மீண்டும் நிரூபித்து உள்ளனர். நீங்கள் அதிகாரப் பசியில் இருப்பதால், ஏழையின் பசி குறித்து கவலைப்படுவதில்லை. உங்களின் எதிர்காலம் குறித்து மட்டுமே எப்போதும் கவலைப்படுவதால், இளைஞர்களின் எதிர்காலம் குறித்து உங்களுக்கு அக்கறை இல்லை.
பிரதமர் பேச்சின், ‘ஹைலைட்ஸ்!’
* ஒவ்வொரு எம்.பி.,யின் கருத்தையும் கேட்டேன். மக்கள் மீண்டும் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக பார்க்கிறேன். 2018லும் இதே போன்றதொரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போதும், இந்த தீர்மானம் எங்கள் பலத்தை நிரூபிப்பதற்காக கொண்டுவரப்படவில்லை, எதிர்க்கட்சிகள் தங்கள் பலத்தை சோதித்துக் கொள்ளவே கொண்டுவரப்பட்டது.* கடந்த முறை நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. மக்கள் தங்கள் பெருவாரியான ஆதரவை எங்களுக்கு அளித்து தே.ஜ., கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினர். எனவே, இதை மிகப் பெரிய அதிர்ஷ்டமாக தான் பார்க்கிறோம். இந்த முறையும் நாங்கள் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர்.* கடந்த 1999ல் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சரத்பவார் தலைமை ஏற்று பேசினார். 2003ல் சோனியா பேசினார். இந்த முறை ஏன் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை? ஏன் அவர் ஓரங்கட்டப்பட்டார்? ஒருவேளை கோல்கட்டாவில் இருந்து உத்தரவு வந்திருக்கும். சவுத்ரியை நினைத்தால் பாவமாக உள்ளது.* நாடு குறித்த நல்ல விஷயங்களை கேட்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை.* அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக செல்வது மிக அற்புதமான திட்டம் என, சர்வதேச நிதியம் வியந்து பாராட்டி உள்ளது. ‘ஜல்ஜீவன்’ திட்டத்தின் வாயிலாக, லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது.* என்னை பற்றி எதிர்க்கட்சிகள் பேசும் மோசமான வார்த்தைகள் எனக்கு உற்சாக, ‘டானிக்’ போல் உள்ளது. அவை என்னை மேலும் உயர செய்கிறது. அவர்கள் யாரை பற்றி மோசமாக விமர்சிக்கின்றனரோ அவர்கள் முன்னை விட வேகமாக வளர்ந்துள்ளனர். உதாரணத்திற்கு, பொதுத்துறை வங்கிகள் அதல பாதாளத்திற்கு செல்வதாக நிபுணர்களை வைத்து வதந்தி கிளப்பினர். ஆனால், வங்கிகள் இன்று இரட்டிப்பு லாபம் தருகின்றன.* வரும் 2028ல் மீண்டும் நீங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது, நம் நாடு உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் முதல் மூன்று இடங்களில் இருக்கும்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ‘சஸ்பெண்ட்’
நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது, காங்., லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், “பிரதமர் மோடி பார்லி.,யில் வந்து மணிப்பூர் பிரச்னை குறித்து பேச வேண்டும் என, நாங்கள் கோரிக்கை விடுத்தோம். எந்த பா.ஜ., உறுப்பினரையும் நாங்கள் சபைக்கு வரச் சொல்லவில்லை. மஹாபாரதத்தில் மன்னன் திருதராஷ்டிரன் குருடனாக அமர்ந்திருந்த போது, திரவுபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டன. அதே போல் இன்று நம் அரசனும், குருடனாக அமர்ந்துள்ளார்,” என கூறினார். இதற்கு மத்திய அமைச்சர்கள், பா.ஜ., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், மத்திய அமைச்சர்களின் பேச்சுக்கு தொடர்ந்து இடையூறு செய்ததாகவும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீது குற்றஞ்சாட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காங்கிரஸ் லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சிறப்புரிமைக் குழு விசாரிக்கும் வரை, அவரை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தாக்கல் செய்தார்.
2 மணி நேரம், 13 நிமிடம்…
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக பிரதமர் மோடி, 2 மணி நேரம், 13 நிமிடங்கள் பேசினார். மாலை 5:09 மணிக்கு பேச்சைத் துவங்கினார். 6:40 மணிக்கு எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இரவு 7:22 மணிக்கு பிரதமர், தன் பேச்சை முடித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்