ஆசிய ஆக்கி இறுதிப்போட்டி : மத்திய மந்திரி அனுராக் தாகூர் பங்கேற்பு

சென்னை,

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரை இறுதிச் சுற்று ஆட்டத்தில்,இந்திய அணி ஜப்பானை சந்தித்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.

அதே போல் நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தென்கொரியா அணியுடன், மலேசியா அணி மோதியது. இதில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய மலேசியா அணி 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இறுதிப்போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் பங்கேற்க உள்ளார். அனுராக் தாகூர் இறுதிப்போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிக்க உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.