புதுடெல்லி: ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கும் வகையில் ஜிஎஸ்டி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியது.
குதிரை பந்தய கிளப், கேசினோக்கள், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும் இதற்காக, மத்திய மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
மாநிலங்களவையில் எந்த விவாதமும் இல்லாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் முன்மொழியப்பட்ட இந்த இரண்டு சட்டங்களும் மக்களவைக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இந்த நிலையில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா 2023 மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா 2023 ஆகிய இரண்டு பண மசோதாக்களுக்கும் மக்களவை நேற்று ஒப்புதல் அளித்தது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும் இந்த மசோதாக்களை தாக்கல் செய்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இறுதிநாளில் ஆன்லைன் கேமிங் மீதான வரி விதிப்பு மசோதா நிறைவேறியுள்ளது குறிப்பிடத் தக்கது. மாநில ஜிஎஸ்டி சட்டங்களில் நிறைவேற்றப்பட்ட திருத்தங்களுக்கு அந்தந்த மாநில சட்டப்பேரவைகளில் ஒப்புதல்பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.