சென்னையில் விரைவில் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் – ஏ.ஆர்.ரஹ்மான் பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

சென்னை: கலைஞர் கன்வென்ஷன் சென்டர் சென்னை நகரத்தின் புதிய கலாச்சார அடையாளமாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்கான டிக்கெட்டுகள் மளமளவென விற்று தீர்ந்த நிலையில், கான்சர்ட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ரஹ்மானின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக சென்னையில் சையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடக்கவிருந்த ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், “மோசமான வானிலை, தொடர் மழை மற்றும் என் அன்புக்குரிய ரசிகர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு கருதி இன்றைய இசை நிகழ்ச்சி வேறொரு நாளில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், “அரசாங்கத்தின் உதவியுடன்.. கலை, மெகா ஷோக்கள் மற்றும் சர்வதேச அனுபவங்களுக்கான அடுத்த கட்ட உள்கட்டமைப்பை சென்னைக்கு உருவாக்குவோம் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தப் பதிவை டேக் செய்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பெரிய இசை கச்சேரிகள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்துவதற்கு ஏதுவாக கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் உலக தரத்தில் அமையவுள்ளது.

ஹோட்டல்கள், உணவு விடுதிகள், பார்க்கிங் இடங்கள் உள்ளிட்டவற்றுடன் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் சென்னை நகரத்தின் புதிய கலாச்சார அடையாளமாக இருக்கும்!” என்று தெரிவித்துள்ளார். 25 ஏக்கர் பரப்பளவில் 5,000 பேர் அமரக்கூடிய வசதியுடன் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் சென்னையில் அமைக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்தப் பதிவை வெளிப்படுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.